பாத்திரம் கழுவிய சுபாஷினி இப்போ பத்மஸ்ரீ... நிஜ மெர்சல் கதை!

பிறந்த நிமிடத்திலிருந்து வறுமை துரத்தும், எளியவர்களுக்காக வாழும் அசாதாரண பெண்ணின் கதையிது. மேற்கு வங்கத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கொத்துக்கொத்தாக இறந்த விவசாயிகளின் கிராமத்தில் பிறந்தவர் சுபாஷினி. கொல்கத்தாவிலிருந்து 30 கிலோமீட்டர் தெற்குப் பக்கமாகத் தள்ளியிருந்த குல்வா கிராமத்தில், சிறுநிலம் கொண்ட குறு விவசாயிதான் அவரின் தந்தை. 14 குழந்தைகளுக்கும் உணவிட முடியாத அந்த ஏழைக் குடும்பத்தில்,  சுபாஷினியின் தாய்தான் அவர்களின் ஒட்டுமொத்த ஆதாரம். தேவாலயங்களில், ஆஸ்ரமங்களில், தொண்டு நிறுவனங்களில், பண்ணையார் வீடுகளில் என பல இடங்களில் உணவைப் பெற்று குழந்தைகளை வளர்த்திருக்கிறார். பாடுபட்டு வளர்த்த குழந்தைகளில் 7 பேர் இறந்துவிட, 12 வயதில் சுபாஷினிக்குத் திருமணம் நடந்திருக்கிறது.

சுபாஷினி

மாதத்திற்கு 200 ரூபாய் சம்பளம் வாங்கும் விவசாயக் கூலி, சுபாஷினியின் கணவர் சதன் சந்த்ர மிஸ்ட்ரி. நான்கு குழந்தைகளும், கணவரும் மட்டுமே உலகமாய் வாழ்ந்த சுபாஷினியின் வாழ்வு 1971-ல் தலைகீழாக மாறியிருக்கிறது. இரைப்பைக் குடல் அழற்சி என்னும் எளிதாக சிகிச்சையளிக்கக்கூடிய நோய்தான் சந்த்ர மிஸ்ட்ரிக்கு. வயிற்று வலியாலும், வயிற்றுப்போக்காலும் துடித்தவரை கொல்கத்தாவின்  டோலிகுஞ்ஜ் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் சுபாஷினி. வலியால் துடித்த மனிதரைக் கண்டுகொள்ளாமல் பணம் கேட்ட அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் இறந்திருக்கிறார் சந்த்ரா. கணவர் சந்த்ரா மரணத்தைத் தழுவியதை விட, பணம் இல்லாத காரணத்தால் நல்ல சிகிச்சை பெற முடியாத துயரத்தில் இறந்தார் என்னும் சிந்தனைதான், சுபாஷினியை அதிகம் வதைத்திருக்கிறது. எழுதப் படிக்கத் தெரியாத, ஏழை சுபாஷினியின் வாழ்க்கைப் போராட்டம் துவங்கிய நாள் அது.

கண்ணீரையும் பயத்தையும் ஒருசேர துடைத்துக்கொண்டு, இனி ஒருவர் பணம் காரணமாக சிகிச்சையளிக்கப்படாமல் இறக்கக்கூடாது என்று தனி ஒருத்தியாய் அந்த முடிவை எடுக்கிறார். சின்னதாக இலவச மருத்துவமனை ஒன்றைக் கட்டவேண்டும் என்பதுதான் அது. வீட்டு வேலை பார்க்கும் சுபாஷினியின் மொத்த வருமானமே மாதத்துக்கு 100 ரூபாய்தான். அதுவும் 5 வீடுகளில் வேலை பார்த்தால்தான் இந்தச் சம்பளம் கிடைக்கும். வறுமை மட்டுமே லட்சியத்துக்குத் தடையாய் இருந்துவிடக் கூடாது. என்ன செய்வது?

ஒரு குழந்தையையாவது படிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில், முதல் மகன் அஜய் மிஸ்ட்ரியை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்ட சுபாஷினி, மற்ற குழந்தைகளை தன்னுடன் வைத்து வளர்க்கிறார். பிறகு தெருத்தெருவாக காய்கறி விற்கத் தொடங்கிய அவர், சாலையோரக் கடை விரித்து கிடைத்த தொகையில் சிறு பகுதியைச் சேமிக்கத் தொடங்குகிறார். 

காலம் உருண்டோடுகிறது. 20 வருடங்களாகி விட்டது. சேமித்த  பணத்தைச் சோதனை செய்தபோது, 10,000 தேறியிருந்தது. அதில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி, மருத்துவமனைக் கட்டடம் கட்டுவதற்கு கிராமவாசிகளின் உதவியை நாடுகிறார். திரட்டிய பணத்தின் மூலமும், ஏதுமற்றவர்களின் பொன்னுழைப்பின் மூலமும், இருபதுக்கு இருபது அடியில் ஒரு சின்ன மருத்துவமனை உருவாகிறது.

கீற்றுக்கொட்டகை மருத்துவமனையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரம் வரையில், ஆட்டோ ரிக்‌ஷாவில் லவுட்ஸ்பீக்கரைக் கட்டிக்கொண்டு, இலவச  மருத்துவம் பார்க்க வரும்படி மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் கிராம மக்களும் சுபாஷினியும். அன்பிற்கான அழைப்பில் முதலில் இணைந்தவர் டாக்டர்.ரகுபதி சாட்டர்ஜி. மேலும் ஐந்து மருத்துவர்கள் வரிசையாக இணைந்து, இலவச மருத்துவத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். முறையான மருத்துவமனையாக உருமாறிய அந்தக் கீற்றுக் கொட்டகை, முதல் நாளில் 252 நோயாளிகளைக் கண்டது. ”Humanity Hospital” என்று பெயரிடப்பட்ட சுபாஷினியின் மருத்துவமனை இன்றுவரை தன் சேவைக் கரங்களை நீட்டியே வைத்திருக்கிறது.

மழைக்காலங்களில் முட்டி வரையிலான நீருடன், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த சுபாஷினியின் மகனான மருத்துவர் அஜய் மிஸ்ட்ரி, சேவையைத் தனது தோளிலும் ஏற்றிக்கொண்டிருக்கிறார். அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பட்டாச்சார்யாவை, தொடர் முயற்சிக்குப் பின் அணுகி, மருத்துவமனைக் கட்டடத்துக்கான தொகையைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். தொடர்ச்சியாக, பல மருத்துவர்கள், அரசு அதிகாரிகளின் உதவி மற்றும் முயற்சிகளும் சேர்ந்து பலனளிக்க, சிறப்பு மருத்துவப் சிகிச்சைப் பிரிவுகளுடன், 3 ஏக்கர் நிலத்தில், இரண்டு மாடி மருத்துவ அகமாக உயர்ந்திருக்கிறது ‘ஹ்யுமனிட்டி ஹாஸ்பிட்டல்’.

மகன் அஜய் மிஸ்ட்ரியிடம் மருத்துவமனையை ஒப்படைத்து விட்டார்; இளைய மகள் அதே மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிகிறார். மூத்த மகளும், மற்றொரு மகனும் ரோட்டோரக் கடையில் காய்கறி வியாபாரம் செய்வதற்குத் துணை புரிந்துகொண்டு, அதே வாடகைக் குடிசையில் வாழ்கிறார் 70 வயதான ’பத்மஸ்ரீ’ சுபாஷினி மிஸ்ட்ரி. ஆம். சமீபத்தில் ராஷ்ட்ரபதி பவனில்  ’பத்மஸ்ரீ’ பட்டம் பெற்றிருக்கிறார் சுபாஷினி மிஸ்ட்ரி.

                                             subhasini mistry

''எப்படியம்மா உணர்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம், “விருது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் மருத்துவமனைக்கு இன்னும் தேவைப்படும் உதவிகளை அளிக்க அரசிடம் கோரிக்கை வைக்கிறேன். உலகத்திலிருக்கும் எல்லா மருத்துவமனைகளுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்க நினைக்கிறேன். வலியில் இருக்கும் நோயாளிக்குச் சிகிச்சையை மறுத்துவிடாதீர்கள். சிகிச்சை கிடைக்காமல் இறக்கும் அவலநிலையை ஒருவருக்கும் தந்துவிடாதீர்கள்” என்கிறார் கால்கள் தள்ளாடி, கைகூப்பிய அந்த வைராக்கிய மனுஷி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!