``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மக்களைத் திரட்டிப் போராட்டம்"- அ.தி.மு.க. சூசகம்...! | AIADMK is ready to mobilise people to insist on forming Cauvery management board!

வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (22/03/2018)

கடைசி தொடர்பு:20:34 (22/03/2018)

``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மக்களைத் திரட்டிப் போராட்டம்"- அ.தி.மு.க. சூசகம்...!

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை - அ.தி.மு.க

ச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தற்போது நாடாளுமன்றத்தை முடக்கி வரும் அ.தி.மு.க., அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தமிழகத்தில் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தும் என்று மக்களவைத் துணை சபாநாயகர் மு. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து போன்ற காரணங்களால் அ.தி.மு.க உள்ளிட்ட தமிழக எம்.பி-க்கள் மற்றும் ஆந்திர மாநில எம்.பி-க்களின் அமளி காரணமாக, அலுவல் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பிரச்னைகளால், நாடாளுமன்றம் தொடர்ந்து 14-வது நாளாக வியாழக்கிழமையும் முடங்கியது. இரு அவைகளிலும் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்களும், தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்களும் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பியதால், தொடர்ந்து அவையை நடத்த முடியாத சூழலில் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. தவிர, மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

நாடாளுமன்றம்

இன்றைய தினம் அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய பி.ஜே.பி. அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியது. எஸ்.சி, எஸ்.டி-யினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ள உத்தரவைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

மாநிலங்களவையில் உறுப்பினர்களின் அமளியால் அதிருப்தியடைந்த அதன் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, ``இத்தகைய அநாகரிக நடவடிக்கைகளை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றார். ``எந்தவொரு பிரச்னை பற்றியும், எந்த விவகாரமானாலும் அதுபற்றி விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது'' என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல் தெரிவித்தார். எனினும், உறுப்பினர்களின் அமளி நீடித்ததால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

மக்களவையைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. உறுப்பினர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், தெலங்கானா மாநிலத்தில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் டி.ஆர்.எஸ். உறுப்பினர்களும் கூச்சல் -குழப்பத்தில் இறங்கினர். 

மக்களவையில் உறுப்பினர்களின் அமளி காரணமாக, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள முடியாத சூழல் நிலவுவதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் குறிப்பிட்டார். காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களும் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டதால், மக்களவைத் தொடர்ந்து கூச்சல் - குழப்பத்துடனேயே காணப்பட்டது.

``பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு உள்ளிட்ட அனைத்து விவகாரம் குறித்தும் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது'' என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் உறுதியளித்தார். என்றாலும், அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்குச் செல்லாமல் தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால், முதலில் பிற்பகல் வரையிலும், பின்னர் நாள் முழுமைக்கும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. 

தம்பிதுரைமக்களவைத் துணை சபாநாயகரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான மு.தம்பிதுரை, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கி வருகிறோம். இன்றைக்கு அகில இந்திய அளவில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள அ.தி.மு.க.-வின் இந்தச் செயல்பாட்டால், ஒட்டுமொத்த மக்களின் கவனமும் ஈர்க்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு விழிப்புஉணர்வு; இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் இந்தப் பிரச்னையை நாங்கள் எழுப்பியுள்ளோம். முதலில் இதுவே மிகப்பெரிய வெற்றி. இதுவரை, பி.ஜே.பி-யின் ஊதுகுழல் என்று அ.தி.மு.க-வைப் பலரும் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்தப் பிரச்னைக்கு அ.தி.மு.க. தைரியமாகப் போராடுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

'இந்த எம்.பி-க்கள் அனைவரும், பார்லிமென்ட் போய் என்ன செஞ்சாங்க' அப்படிங்கிற கேள்விக்கும் இடமில்லாமல் போகும். தமிழ்நாட்டுக்குக் குடிதண்ணீர் மற்றும் விவசாயத்துக்குக் காவிரி தண்ணீர் மிகவும் முக்கியமானதாகும். அதுவே கிடைக்கவில்லை என்றால், அப்புறம் என்ன செய்வது? அதற்காக எங்களின் எதிர்ப்பைக் காட்டித்தான் ஆக வேண்டும். காவிரிப் பிரச்னைக்காக எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா) ஆகியோர் உண்ணாவிரதம் இருந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு போராட்டம். அத்தகைய போராட்டம் தற்போது வலுவடைந்து, ஒரு வெற்றிக்கனி வருகிற நிலையில் இருக்கும்போது, நாங்கள் நாடாளுமன்றத்தில் அதற்காகப் போராட வேண்டியது எங்களின் கடமை. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். எங்களின் போராட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. 

காவிரி மேலாண்மை வாரியம் என்று சொல்லாமல், திட்டம் என்று சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான். மத்திய அரசு எங்களின் தொடர் போராட்டங்களுக்குச் செவிசாய்க்காவிட்டால், இந்த மாத இறுதியில், அ.தி.மு.க. தலைமைக்குத் தெரிவித்து, கட்சி ஒப்புதலுடன் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மக்கள் திரண்டது போன்று, அ.தி.மு.க. தலைமையின் ஒப்புதலோடு மாநிலம் முழுவதும் உள்ள மக்களைத் திரட்டி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துவோம். அதுபோன்றதோர் இயக்கத்தை உருவாக்கி, மத்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதுதான் எங்கள் நோக்கம். காவிரி விவகாரத்தில் நாடாளுமன்ற முடக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இது இருக்கும்" என்றார். 
  
மேலும், ``காவிரி விவகாரத்தில் பிரதமரை தமிழகத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசுவது தொடர்பாக, ஏற்கெனவே அனுமதி கோரியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, சட்டசபைத் தீர்மானங்களை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை" என்றார் தம்பிதுரை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close