விடிந்தால் திருமணம்... தந்தையால் மகளுக்கு நடந்த கொடூரம்! #HonourKilling | Kerala honour killing - Man stabs daughter to death

வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (23/03/2018)

கடைசி தொடர்பு:13:09 (23/03/2018)

விடிந்தால் திருமணம்... தந்தையால் மகளுக்கு நடந்த கொடூரம்! #HonourKilling

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த மகளை தந்தையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.  

ஆணவக்கொலை
 

இந்த ஆணவக்கொலை பற்றி காவல்துறை தரப்பில் பேசுகையில், `கேரள மாநிலம் பூவதி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா (22). இவர் மருத்துவக் கல்லூரியில் டயாலிஸிஸ் மையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரின் தந்தை ராஜன் டிரக் ஓட்டுநர். மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆதிரா பட்டியலின சமூக இளைஞரைக் காதலித்து வந்தார். அந்த இளைஞர் ராணுவத்தில் பணிபுரிபவர். ஆதிராவின் தந்தைக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும், ஆதிராவின் தாய், மகளின் ஆசைப்படி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆதிராவின் தந்தையைத் தவிர குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் இந்தத் திருமணத்தில் முழு சம்மதம். இன்று (23.3.2018) திருமணம் நடக்கவிருந்தது. வேறு சமூகத்தைச் சேர்ந்தவருடன் மகளுக்குத் திருமணம் நடப்பதை ராஜனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் நேற்றிரவு ஆதிராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில் ராஜன் ஆத்திரமடைந்து கத்தியால் மகளை சரமாரியாகக் குத்தினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ஆதிராவை உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பாதி வழியிலேயே ஆதிரா உயிரிழந்தார். ராஜனை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது’ இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விடிந்தால் திருமணம் என்கிற நிலையில், `சாதி’ என்ற ஒற்றை வார்த்தையால் பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது கேரளாவையே உலுக்கியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க