Published:Updated:

லாக் டெளனால் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற 12 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

தெலங்கானாவில் மிளகாய் சாகுபடி செய்யும் கூலி வேலையைச் செய்து வந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தெலங்கானாவிலிருந்து, சொந்த ஊர் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தை நோக்கி நடந்து சென்ற 12 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘காசு இல்லாமகூட கிராமத்துல வாழ்ந்திடுவோம்.. ஆனா இங்கு?!’- புலம்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. திடீரென்று அறிவிக்கப்பட்ட இந்தத் தடை உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சென்ற அவலம் மனதை ரணமாக்கிய நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நாக்பூரிலிருந்து நடந்தே வந்த காரணத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டீஸ்கரைச் சேர்ந்தவர் 12 வயதுச் சிறுமி ஜாம்லோ மக்தாம்.

நடந்தே ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள்
நடந்தே ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள்

இவர் தனது குடும்பத்தினை வறுமையைப் போக்குவதற்காக தெலங்கானாவில் உள்ள வயல்களில் மிளகாய் சாகுபடி செய்யும் கூலி வேலையைச் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், லாக் டெளன் அறிவிக்கப்பட்டதால், அவருடன் வேலை செய்தவர்கள் 11 பேரும் சொந்த ஊரான பிஜப்பூர் மாவட்டத்திற்குச் செல்ல ஆயுத்தமாகியுள்ளனர். இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி சட்டீஸ்கர் பயணமானவர்களுடன் 12 வயதுச் சிறுமியும் பயணித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர்த்துவிட்டு, காடுகள் வழியாகப் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர். 150 கிலோ மீட்டர் தூரத்தை 3 நாள்களில் கடந்த நிலையில், சிறுமியின் வீடு 14 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். அவருடன் வந்தவர்கள் தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சென்றபோது, இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.

சொந்த ஊருக்கு நடந்தே பயணப்படும் முதியவர்
சொந்த ஊருக்கு நடந்தே பயணப்படும் முதியவர்

இதையடுத்து சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில் கடுமையாக நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு எடுத்த கொரோனா தொற்று பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

சிறுமியின் தந்தை அந்தோரம் மட்கம் பேசுகையில், ``உள்ளூரில் உள்ளவர்களுடன் இணைந்து வேலைக்காகச் சென்றவள். தெலங்கானாவில் கூலிவேலை செய்துவருவதாகக் கூறியிருந்தாள். இதன்பிறகு கடந்த வாரம் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறேன் என்றும் தமக்குக் கடுமையான வயிற்று வலியும் இருப்பதாகவும் கூறினார்.

நடந்தே செல்லும் தொழிலாளர்கள்
நடந்தே செல்லும் தொழிலாளர்கள்

நானும் காத்திருந்தேன். என் மகள் வருவாள் என்று எண்ணியிருந்தேன். ஆனால், பிணமாக வருவாள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்று கண்ணீருடன் கூறியுள்ளார். அடிப்படைக் கல்விகூட இல்லாமல் கூலி வேலை செய்து வந்துள்ள சிறுமியின் உயிரிழப்பு நாட்டையே உலுக்கியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு