Published:Updated:

கொரோனா: வறுமையை நோக்கி 120 மில்லியன் குழந்தைகள்; எதிர்காலம்? -யுனிசெஃப்

குழந்தைகள்
குழந்தைகள் ( மாதிரிப்படம் )

``குடும்ப வன்முறை, மனச்சோர்வு மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றால் தற்போது வீடுகளில் அதிக நேரத்தைச் செலவிட்டு வரும் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்”.

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் 93 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4.78 லட்சத்தைக் கடந்துள்ளது.

வைரஸ் பாதிப்பு ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும்போது, மறுபுறம் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏற்படும் விளைவுகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகக்கடுமையாகப் பாதித்ததுடன் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் யுனிசெஃப், கொரோனா வைரஸ் பாதிப்பின் விளைவாக தெற்காசியப் பகுதிகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கூறியுள்ளது, அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

யுனிசெஃப்
யுனிசெஃப்

உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்பகுதி மக்கள் தெற்காசிய நாடுகளில் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இந்த நாடுகளில் வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இந்த நாடுகளில் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிப்படைந்துள்ளன.

பொருளாதாரத்தை மீட்க அரசாங்கங்கள் படிப்படியாக ஊரடங்கையும் தளர்த்தி வருகின்றன. குழந்தைகள் வைரஸால் குறைந்த அளவிலேயே பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும் ஊரங்கின் காரணமாக ஏற்படும் பொருளாதாரம் மற்றும் பிற சமூகப் பிரச்னைகள் காரணமாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என யுனிசெஃப் நிறுவனம் அறிக்கையின் வழியாகத் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் அன்பால் நீங்கியது மாணவர்களின் வறுமை.. கோவை நெகிழ்ச்சி!

கொரோனாவால் பாதிப்படையும் தெற்காசிய நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு மற்றும் பூடான் ஆகியவை அடங்கும். இந்த நாடுகளில் சுமார் 600 மில்லியன் குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே, இதில் சுமார் 240 மில்லியன் குழந்தைகள் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தற்போது நிலவும் மிகவும் மோசமான சூழலில் மேலும் 120 மில்லியன் குழந்தைகள் வரும் ஆறு மாதங்களுக்குள் உணவு இல்லாமை உள்ளிட்ட வறுமையான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக யுனிசெஃப் நிறுவனத்தின் தெற்காசியப் பகுதியின் இயக்குநர் ஜீன் காஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இந்தப் பிரச்னைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், கொரோனா வைரஸ் ஒரு முழுத் தலைமுறையின் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் அழிக்கக்கூடும்' என்று கூறியுள்ளார்.

வறுமை
வறுமை

பங்களாதேஷில் சில குடும்பங்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் இலங்கையில் 30 சதவிகிதக் குடும்பங்கள் உணவு உள்கொள்வதைக் குறைத்துக்கொண்டதாகவும் யுனிசெஃப் கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது.

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஏழைக் குழந்தைகள் தங்களது கல்வியைத் தொடரவும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர், குறிப்பாக மின்சாரம் மற்றும் இணையம் உள்ளிட்ட வசதிகள் இல்லாத கிராமப்புறப் பகுதிகளில் இந்தப் பிரச்னை அதிகமாகக் காணப்படுகிறது.

குடும்ப வன்முறை, மனச்சோர்வு மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றால் தற்போது வீடுகளில் அதிக நேரத்தைச் செலவிட்டு வரும் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையையும் பதிவு செய்துள்ளனர். கொரோனா ஏற்படுத்தி வரும் பிரச்னைகளில் குழந்தைகள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர் என்ற தகவல் பலரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னைகளில் இருந்து குழந்தைகளை மீட்பதில் அல்லது பாதுகாப்பதில் சமூகம் மற்றும் அரசின் பங்கு என்ன என்பது குறித்த கேள்விகளும் எழத் தொடங்கியுள்ளன.

`மரண பயம், வறுமை பயமாக மாறியுள்ளது!' - 10-வது ஆண்டாகத் தொடரும் சிரிய போரால் கலங்கும் மக்கள்
அடுத்த கட்டுரைக்கு