வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (23/03/2018)

கடைசி தொடர்பு:15:50 (23/03/2018)

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 20 பேரின் தகுதி நீக்கத்தை ரத்து செய்தது நீதிமன்றம்..!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ஆம் ஆத்மி எல்.எல்.ஏ-க்கள் 20 பேர் விதிமுறைகளுக்கு மாறாக ஆதாயம் அடையும் வகையில் எம்.எல்.ஏ தவிர மற்றொரு அரசுப் பதவியில் இருப்பதாகப் பிரஷாந்த் படேல் என்பவர் புகார் அளித்தார். அதனடிப்படையில் எம்.எல்.ஏ-க்கள் 20 பேரையும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தகுதி நீக்கம் செய்து ஆணை பிறப்பித்தார். அதை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 28-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில், '20 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. தகுதி நீக்கம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரைகளை ரத்து செய்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான புகார் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'உண்மை வென்றுள்ளது. டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறான முறையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்றம், டெல்லி மக்களுக்கு நீதி வழங்கியுள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.