வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (23/03/2018)

கடைசி தொடர்பு:16:46 (23/03/2018)

``2019 தேர்தலுக்குப் பிறகே இந்தியா வளரும்!’’ - ரகுராம் ராஜனின் கணிப்பு

7.5 சதவிகித வளர்ச்சியுள்ள நாடு அத்தனை இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராது என்றும் 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கணித்திருக்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

தற்போது அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ரகுராம் ராஜன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில் ``2019 தேர்தல் வரை வங்கித்துறையில் புதிதாக வேறு எந்தச் சீர்திருத்தங்களையும் மத்திய அரசு மேற்கொள்ளாது. தற்போது இந்தியாவின் ஜி.டி.பி மதிப்பானது  7.5-ல் உள்ளது. அடுத்த வருடம் வரை இது இந்த நிலையிலேயேதான் இருக்கும். அதன் பின்னர் மெள்ள மேல் நோக்கி நகரக்கூடும். ஆண்டுக்குத் தொழிலாளர்களாக 1 கோடியே 20 லட்சம் இளைஞர்கள் வேலைதேடி வெளியே வருகிறார்கள். ஆனால், 7.5 சதவிகித வளர்ச்சியால் அவர்கள் அனைவருக்கும் வேலைப் பெற்றுத்தர முடியாது. 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்குப்பிறகு, தற்போது நாட்டில் நடைபெற்றுள்ள வரிச்சீரமைப்பிற்கு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார் அவர். ``2019-க்குப் பிறகு 10 சதவிகித வளர்ச்சி என்பதுகூட சாத்தியம்தான். ஆனால், அதற்கான வேலைவாய்ப்பை நாம் உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்பு இல்லாமல் போனால் வளர்ச்சி இருக்காது. இந்தியா தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருப்பதால் வங்கித்துறையில் எந்தவகையான புதியச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது. எல்லா புதிய மாற்றங்களையும் மூட்டைகட்டி வைத்துவிடுவார்கள். தேர்தலை நோக்கிய கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மட்டுமேயிருக்கும். தேர்தல் முடிந்தபிறகுதான் வங்கித்துறையில் மாற்றங்கள் நிகழும். வளர்ச்சியும் இருக்கும்''  என்கிறார் ரகுராம் ராஜன். 

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் முன் வைக்கிறார் ரகுராம் ராஜன். ``உலக நாடுகள், அவர்களது பொருளாதாரத்தைப் பாதிக்கும் காரணத்தால் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டே வருகின்றன. இந்தியாவும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் வளர்ச்சி விகிதமானது ஏற்றுமதியினால் மட்டுமே பெருமளவு உந்தப்படுகிறது. அதைப்போலவே இந்தியாவும் உற்பத்தியை மட்டும் அதிகரித்தால் தயாராகும் பொருள்களை யார் வாங்குவார்கள். இந்தியாவில்தான் பொருள்களை வாங்கும் திறன்கொண்ட மக்கள் அதிகளவில் உள்ளனர்'' என்றும் சொல்லியிருக்கிறார் ரகுராம். 

 ஸ்ரீனிவாசன், ஆடிட்டர்``சீனா நமக்கு அண்டை நாடு. கடந்த 10 ஆண்டுகளுக்குள் ”சரசர”வென முன்னேறியுள்ளது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளுக்குச் சவாலாக நின்று வென்றுள்ளது. அவர்கள் சீனப் பொருள்களுக்கான மார்க்கெட்டை உலகளவில் பெரிதாக உருவாக்கிவிட்டார்கள். ஆனால், இந்தியா அப்படி அல்ல. 'இந்தியா திடீரென உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக மாறிவிட்டால், பொருள்களை வாங்குவது யார்?' என்கிற ரகுராம் ராஜனின் கேள்வி மிகச்சரியானது. ஏற்றுமதிக்கான உற்பத்தி என்பது சரியான பார்வையாக இருக்குமா? அதற்கான கட்டமைப்பை உருவாக்கி விட்டு விற்பனை வாய்ப்பு இல்லாமல் போனால் என்ன செய்வது? இந்தக் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்வது அவசியம். தனிமனிதத் திறன் மேம்பாடு, கணினி மென்பொருள் துறையில் நாம் ஜெயிக்கும் வகையில் அமைய வேண்டும். இந்திய மக்கள் தொகைக்குத் தக்கவாறு நம் உற்பத்தி வியூகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் இருபது ஆண்டுகளில் மக்கள் தொகை எவ்வளவு இருக்கும், அப்போது என்ன மாதிரியான பொருள்களுக்குத் தேவையிருக்கும்  என்பதை இப்போதே கணித்து முனைப்பில் இறங்க வேண்டும்'' என்கிறார் ஆடிட்டர் ஶ்ரீனிவாசன்.