வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (23/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (23/03/2018)

`மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்!’ - மக்களவைச் செயலாளரிடம் காங்கிரஸ் மனு

மத்திய பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பஞ்சாப் நேஷ்னல் வங்கிக் கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களால் நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளால் தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மத்திய அரசின்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளன. ஆனால், அமளி காரணமாக அந்தத் தீர்மானத்தின் மீது இதுவரை விவாதம் நடைபெறவில்லை. 

இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி மக்களவையில் மனு கொடுத்துள்ளது. இதுதொடர்பாக மக்களவைச் செயலாளரிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே அளித்துள்ள கடிதத்தில், மத்திய பா.ஜ.க. அரசு மீது நாடாளுமன்றத்தில் 27-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.