6 கேள்விகளுடன் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்...!

ஃபேஸ்புக் பயன்பாட்டர்களின் தகவல்களை திருடியதாக கூறப்படும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica), நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் உதவி செய்தது என சமீபத்தில் பிரிட்டனின் சேனல் 4 செய்தி வெளியிட்டது. இந்த விவகாரம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சி.இ.ஓ நிக்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே, மத்திய ஐ.டி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான தேர்தல் வியூகம் வகுப்பதற்காக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சி.இ.ஓ நிக்ஸ் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தார்" எனக் கூறியது இந்திய அரசியல் கட்சிகளிடமும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய ஃபேஸ்புக் பயன்பாட்டர்களின் தகவல்கள் திருப்பட்டதா? அதற்காக அவர்களது அனுமதி பெறப்பட்டதா? என்பன உள்ளிட்ட 6 கேள்விகளுக்கு வரும் 31-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விபரங்களை தர மறுத்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவுக்கு மத்திய அரசு எழுப்பியுள்ள கேள்விகளின் விபரங்கள்

* இந்தியர்களின் ஃபேஸ்புக் தகவலை சேகரித்து பயன்படுத்தினீர்களா?

* அப்படியெனில் எந்த நிறுவனத்துக்கு தகவல்கள் பயன்படுத்தப்பட்டது?

* அந்த நிறுவனங்கள் எவ்வாறு தகவல்களை பெற்றன?

* இதற்காக ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டதா?

* ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் எத்தகைய வகையில் பயன்படுத்தப்பட்டது?

* பெறப்பட்ட தகவல் மூலம் தொகுப்பு ஏதும் தயார்செய்யப்பட்டதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!