வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (24/03/2018)

கடைசி தொடர்பு:21:00 (24/03/2018)

’ஏன் நீங்கள் பொய்களைப் பரப்புகிறீர்கள்?’ பா.ஜ.கவுக்குப் பதிலடி கொடுத்த சந்திரபாபு நாயுடு!

'ஆந்திர அரசைத் திறமையற்ற அரசு எனக் கூற முயற்சி செய்கின்றனர்', அமித் ஷா எழுதிய கடிதத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு பதிலடி கொடுத்திருக்கிறார். 

சந்திர பாபுநாயுடு

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா, ``தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி, அந்தக் கூட்டணியிலிருந்து விலகியது துரதிருஷ்டமானது. ஒரு தலைபட்சமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் வளர்ச்சியில் மோடி அரசு அதீத கவனம் செலுத்தி வருகின்றது. இவர்கள் எடுத்த இந்த முடிவு அரசியல் சார்ந்தே எடுக்கப்பட்டுள்ளது. இது எனக்கு வருத்தத்துடன் பயத்தையும் உண்டாக்குகிறது’’ எனக் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தார். 

இந்தக் கடிதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேசிய சந்திரபாபு நாயுடு, அமித் ஷா கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது அனைத்தும் பொய்யானது. வட கிழக்கு மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆந்திராவுக்கு மத்திய அரசு நிதி வழங்கி, அதை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்தாததுபோல, அவர்கள் சித்திரிக்கின்றனர். உள்நாட்டு உற்பத்தி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆந்திர அரசு பல விருதுகளை வாங்கி உள்ளது. இவர்கள் ஏன் இவ்வாறான பொய் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இதுவே, பா.ஜ.க-வின் அணுகுமுறையைத் தெளிவாகக் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.