வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (25/03/2018)

கடைசி தொடர்பு:11:13 (25/03/2018)

என் மனசாட்சி இடம் தரவில்லை..! விருதை ஏற்க மறுத்த ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா

நம்ம பெங்களுரு என்ற அறக்கட்டளை சார்பில்  ‘நம்ம பெங்களுரு விருது’ ஐ.பி.எஸ் அதிகாரி ரூபாவுக்கு வழங்கபட்டது ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

ரூபா

கர்நாடக மாநில டி.ஐ.ஜி-யாக உள்ளவர் ரூபா. ஆனால், இந்தப் பெயர் தமிழக மக்களுக்குப் பழக்கமானதுதான். காரணம், "சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறி தமிழக, கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியவர். இவரின் அதிரடியால் இன்றளவும் கூட கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குச் சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளன. துணிச்சலுக்கு மட்டுமல்ல நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் அதிகாரிகளில் ஒருவராக டிஐஜி ரூபா வலம் வருகிறார். 

இந்நிலையில் பெங்ளூருவில் உள்ள ஒரு அறக்கட்டளை சார்பில் இவருக்கு விருது வழங்கப்பட்டது ஆனால் அதை ரூபா வாங்க மறுத்து விட்டார். இது குறித்து அந்த அறக்கட்டளையின் தலைவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார், அதில் இந்த விருதை ஏற்க என் மனசாட்சி இடம் தரவில்லை, "ஒவ்வொரு அரசு ஊழியர்களும் நடுநிலையான சமநிலையை மட்டுமே அரசியல் அமைப்புகளிலிருந்தும், அறக்கட்டளை அமைப்புகளிடமிருந்தும் எதிர்பார்ப்பதாக குறிபிட்டுள்ளார். 

இந்த விருதைப் பெறுவதற்கு ரூபா உள்ளிட்ட 8 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு நிகழ்ச்சி நடத்தி தேர்வு செய்யப்பட்டவர்களில் சிறந்தவருக்கு விருது வழங்கபடும். மேலும் இந்த விருதுகள் பல்வேறு துறையில் உள்ள திறமையானவர்களுக்கும் வழங்கப்படும்.