நிலுவையில் உள்ள கருவூல மோசடி வழக்குகள்... லாலு பிரசாத் யாதவுக்கு இன்னும் இருக்கிறது சிக்கல்!

நிலுவையில் உள்ள கருவூல மோசடி வழக்குகள்... லாலு பிரசாத் யாதவுக்கு இன்னும் இருக்கிறது சிக்கல்!

லாலு பிரசாத் யாதவ்

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவிற்கு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், நேற்று (24.03.2018) சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பதினான்கு வருட சிறை தண்டனையும் அறுபது இலட்சம் அபராதமும் விதித்துள்ளது. ஏற்கெனவே   மாட்டுத்தீவன ஊழல் வழக்குகள் மூன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் , மாட்டுத்தீவன ஊழலின் நான்காவது வழக்கான தும்கா கருவூல வழக்கிலும் குற்றம் நிரூபிக்கபட்டுள்ளது. டிசம்பர் 1995 முதல்  ஜனவரி 1996 இடையிலான காலக்கட்டத்தில் தும்கா கருவூலத்திலிருந்து  3.13 கோடி மோசடி செய்ததற்காக லாலு பிரசாத் யாதவ் உள்பட 19 பேருக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துள்ளார் சி.பி.ஐ. நீதிபதி சிவ பால் சிங்.

"லாலு பிரசாத் யாதவிற்கு  இந்திய அரசியலமைப்பு சட்டம் 420, 409, 467, 468, 471, 477, 120B  ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறை  தண்டனையும் , முப்பது இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இது மட்டுமின்றி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றுமொரு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் முப்பது இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை நீட்டிக்கப்படும்." என்று வழக்கறிஞர் விஷ்ணு சர்மா கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து விஷ்ணு சர்மா கூறுகையில் "கால்நடை வளர்ப்பு துறை முன்னாள் பிராந்திய இயக்குனர் ஒ.பி.திவாகருக்கும் பதினான்கு ஆண்டு சிறை தண்டனையும் அறுபது இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற ஒன்பது கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூல்சந்த் சிங்கிற்கும் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் , தலா முப்பது இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அபராதம் செலுத்த தவறினால் மேலும் பதினெட்டு மாதம் சிறைத்தண்டனை நீட்டிக்கப்படும். மேலும் தீவனம் வழங்கிய ஏழு சப்ளையர்களுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும் , தலா பதினைந்து இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.”

‘இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம்’ என லாலு பிரசாத் யாதவின் சட்ட ஆலோசகர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பீகார் முதலமைச்சர் ஜகன்னாத் மிஸ்ரா உள்பட பன்னிரண்டு பேரை குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

2013 ஆம் ஆண்டு மாட்டுத்தீவன ஊழலின் முதல் வழக்கில் சைபசா கருவூலத்திலிருந்து 37 கோடி மோசடி செய்தது நிரூபணம் ஆனதில் லாலு பிரசாத் யாதவ்  ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். மீண்டும் டிசம்பர் 27, 2017 மாட்டுத்தீவன ஊழலின் இரண்டாம் வழக்கில் 89 இலட்சம் மோசடி நிரூபணம் ஆனதில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். பின்னர் மீண்டும் ஜனவரி 24, 2018 மாட்டுத்தீவன ஊழலின் மூன்றாம் வழக்கில் 35கோடி ஊழல் நிரூபணம் ஆனதால், மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். பிகார் – ஜார்க்கண்ட் பிரிவினைக்கு முன்னர் இருந்த ஒன்றுபட்ட பீகாரின் பல மாவட்டங்களின் கருவூலங்களிலிருந்து 900 கோடி ரூபாய் மோசடி செய்யபட்டதற்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இன்று வெளியான இந்த தீர்ப்பு குறித்து லாலு பிரசாத் யாதவின் மனைவியும் பீகாரின் முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி கூறுகையில் “ எனது கணவர் விடுதலை செய்யப்படுவார் என்று நம்பினேன் இந்தத் தீர்ப்பு எங்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது ,இருந்தாலும் சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது, கண்டிப்பாக நியாயம் கிடைக்கும்” என்றார்.  தீர்ப்பு குறித்து லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் கூறுகையில் “ என்னுடைய தந்தைக்கு நிம்மதி கிட்டும் என எதிர்பார்த்தேன்,ஆனால் அது நடக்கவில்லை ஆயினும் நாங்கள் நீதிமன்ற தீர்ப்பினை மதிக்கிறோம்.” என்றார்.  

“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில், ஜகன்னாத் மிஸ்ரா உள்பட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், இது மோடியின் சதி விளையாட்டு” என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் கூறியுள்ளார்.

டிசம்பர் 23, 2017 முதல் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் இருந்து வருகிறார். கடந்த வாரம் நெஞ்சு வலி காரணமாக ராஞ்சியில் உள்ள  ராஜேந்திரா மருத்துவ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு , தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!