வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (25/03/2018)

கடைசி தொடர்பு:18:00 (25/03/2018)

`என் பெயர் மோடி; நான் இந்தியாவின் பிரதமர்!’ - நமோ செயலி விவகாரத்தில் பிரதமரைக் கலாய்த்த ராகுல் காந்தி

`என் பெயர் மோடி; நான் இந்தியாவின் பிரதமர்!’ - நமோ செயலி விவகாரத்தில் பிரதமரைக் கலாய்த்த ராகுல் காந்தி

நமோ செயலி அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய பயனாளர்கள் குறித்த தகவல்களை அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

மோடி - ராகுல் காந்தி

நாட்டு மக்கள் தங்கள் கருத்துகளைப் பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொள்வதற்காக நமோ என்ற பெயரில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-ஓ.எஸ். இயங்குதளங்களில் இயங்கும் செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, பயனாளர்களின் தகவல்களை அமெரிக்காவைச் சேர்ந்த கிளவர் டாப் (Clever Top) என்ற நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்வதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் எலியாட் ஆண்டர்சன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆண்டர்சன், ``நமோ செயலியில் ஒவ்வொரு பயனாளரும், தங்கள் தகவல்களைக் கொடுத்து பதிவு செய்தவுடன், பயனாளர் பயன்படுத்தும் செல்போன் குறித்த தகவல்கள், புகைப்படம், பாலினம் மற்றும் இ-மெயில் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்ட ஓர் இணையதளத்துடன் பகிர்ந்து வருகிறது. இது அந்தப் பயனாளர்களின் அனுமதியின்றியே நடந்து வருகிறது. அந்த இணையதளம் கிளவர் டாப் என்ற அமெரிக்க நிறுவனத்துக்குச் சொந்தமானது’’ என்று தெரிவித்துள்ளார். 

நமோ செயலி

இந்த புகார் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``ஹாய்! என் பெயர் நரேந்திர மோடி. நான் இந்தியாவின் பிரதமர். என்னுடைய செயலியை நீங்கள் பயன்படுத்தினால், உங்களது அனைத்து தகவல்களையும் அமெரிக்க நிறுவனங்களில் உள்ள எனது நண்பர்களுக்கு அளிப்பேன்’’ என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு விளக்கமளித்துள்ள பிரதமர் அலுவலகம், தொழில்நுட்பம் குறித்த அடிப்படை புரிதல் கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், பிறந்தநாள் உள்ளிட்ட தகவல்கள் பயனாளர்களிடமிருந்து பெறப்படுவது, அவர்களின் பிறந்தநாளன்று பிரதமர் மோடியிடமிருந்து பிரத்யேக வாழ்த்துகளை அனுப்புவதற்காகவே’’ என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.