`ஏர்டெல் டிஜிட்டல் டி.வி. கட்டணம் மாதம் ஆயிரம் ரூபாயா?’ - ஸ்டார் நெட்வொர்க் vs ஏர்டெல் சர்ச்சை | Issue raised between Star network Channels and Airtel

வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (25/03/2018)

கடைசி தொடர்பு:19:06 (25/03/2018)

`ஏர்டெல் டிஜிட்டல் டி.வி. கட்டணம் மாதம் ஆயிரம் ரூபாயா?’ - ஸ்டார் நெட்வொர்க் vs ஏர்டெல் சர்ச்சை

ஹெச்.டி. சேனல்களுக்கான கட்டணத்தை ஏர்டெல் டி.டி.ஹெச். சேவையில் அதிகப்படித்தியிருப்பதாகவும், அதனால் உங்கள் டி.டி.ஹெச். கனெக்‌ஷனை மாற்றுங்கள் என்று கூறி ஸ்டார் நெட்வொர்க் சேனல்கள் விளம்பரப்படுத்தி வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்டார் நெர்வொர்க் vs ஏர்டெல் சர்ச்சை

 

இதுதொடர்பாக ஸ்டார் நெட்வொர்க்கில் உள்ள தமிழ் சேனலான விஜய் டி.வியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. `ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாதாரர்கள் கவனத்திற்கு’ என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஹெச்.டி. சேனல்களுக்காக இதுவரை ரூ.200 மட்டுமே வசூலித்து வந்த ஏர்டெல் டிஜிட்டல் டி.வி. அதை ரூ.1,000 என்ற அளவுக்கு உயர்த்தி விட்டதாகவும், அதனால் உடனடியாக உங்கள் டி.டி.ஹெச் கனெக்‌ஷனை மாற்றுங்கள்’ என்று பின்னணியில் குரல் ஒலிக்கிறது. 

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதுதொடர்பாக ஏர்டெல் டிஜிட்டல் டி.வி. தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில், `நாங்கள் டிஜிட்டல் டி.வி. கட்டணங்களை உயர்த்தி விட்டதாக ஸ்டார் நெட்வொர்க் சேனல்களில் பொய்யாக விளம்பரப்படுத்தப்படுவது வேதனையளிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு மிகப்பெரும் தொகை கொடுத்து கிரிக்கெட் தொடர் ஒன்றை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் பெற்றது என்பதை பொதுமக்கள் அறிவர். அதற்கு செலவான பெரிய தொகையை டி.டி.ஹெச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் இருந்து வசூலிக்க ஸ்டார் நெட்வொர்க் முடிவு செய்திருக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் விளக்கம்

இதற்காக, அவர்களது சேனல்களுக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி எங்களிடம் கேட்டனர். ஆனால், இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், ஏர்டெல் டிஜிட்டல் டி.வி. கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை. வாடிக்கையாளர்கள் அதே பழைய கட்டணத்தில் ஸ்டார் நெட்வொர்க் சேனல்களை ஏர்டெல் டிஜிட்டல் டி.வியில் கண்டுகளிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.டி சேனல்களுக்கு மட்டும் ஸ்டார் நெட்வொர்க் குறிப்பிடும் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் தர வேண்டும். ஏர்டெல் நிறுவனம் எந்தவிதமான கட்டணத்தையும் அதிகமாக வசூலிக்கப்போவதில்லை என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது.  ஸ்டார் நெட்வொர்க் சேனல்கள் மற்றும் ஏர்டெல் இடையிலான இந்த சர்ச்சை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.