’நமோ’ செயலியை தொடர்ந்து காங்கிரஸ் செயலியும் சர்ச்சையில் சிக்கியது! - ப்ளே ஸ்டோரில் இருந்து திடீர் நீக்கம்

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ஆப் டெலீட் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

நாட்டு மக்கள், தங்கள் கருத்துகளை பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொள்வதற்காக, 'நமோ' என்ற பெயரில் ஆண்ட்ராய்டு மற்றும்
ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் இயங்கும் செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, பயனாளர்களின் தகவல்களை
அமெரிக்காவைச் சேர்ந்த க்ளவர் டாப் (Clever Top) என்ற நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்வதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் எலியாட் ஆண்டர்சன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகார் தொடர்பாக ராகுல் காந்தி ட்விட்டரில் மோடியை விமர்சித்து கருத்துப் பதிவிட்டிருந்தார். அதில், ``ஹாய்! என் பெயர் நரேந்திர மோடி. நான், இந்தியாவின் பிரதமர். என்னுடைய செயலியை நீங்கள் பயன்படுத்தினால், உங்களது அனைத்துத் தகவல்களையும் அமெரிக்க நிறுவனங்களில் உள்ள எனது நண்பர்களுக்கு அளிப்பேன்’’ என்று கூறியுள்ளார்.  

 

இந்தக் குற்றச்சாட்டுகுறித்து விளக்கமளித்துள்ள பிரதமர் அலுவலகம், தொழில்நுட்பம்குறித்த அடிப்படை புரிதல்கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், பிறந்தநாள் உள்ளிட்ட தகவல்கள் பயனாளர்களிடமிருந்து பெறப்படுவது அவர்களின் பிறந்தநாளன்று பிரதமர் மோடியிடமிருந்து பிரத்யேக வாழ்த்துகளை அனுப்புவதற்காகவே’’ என்றும்  விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் எலியாட் ஆண்டர்சன்,  மேலும் ஒரு ட்வீட்டை நேற்று பதிவிட்டுள்ளார். அதில், ஐ.என்.சி (இந்தியன் நேஷ்னல் காங்கிரஸ்) பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை நாளை வெளியிடுகிறேன் எனப் பதிவிட்டிருந்தார்.

இன்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் சில எண்களும் ஒரு ஐ.பி முகவரியும் அடங்கிய ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். மேலும் இந்த ஐ.பி சிங்கபூரில் உள்ளது இது இந்திய அரசியல் கட்சியுடையது என பதிவிட்டிருந்தார். இவர் பதிட்ட சில மணி நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலக செயலி, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!