`பெட்ரோல் பங்க்கில் தீ பிடித்த லாரி!' மின்னல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ டிரைவர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் பங்க்கில் இருக்கும்போது தீ விபத்தில் சிக்கிய பெட்ரோல் டேங்கர் லாரியை, சமயோசிதமாகச் செயல்பட்டு உடனடியாக அங்கிருந்து ஓட்டிச் சென்று பெரும் உயிர்ச்சேதத்தைத் தவிர்த்த லாரி ஓட்டுநர் மக்களின் பாராட்டைப் பெற்றார். 

லாரி ஓட்டுநர் சாஜித்

Photo Credit: ANI

மத்தியப்பிரதேசத் தலைநகர் போபாலிலிருந்து 225 கி.மீ தூரத்தில் உள்ள நர்சிங்பூரில் நேற்று இரவு நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு டீசல் ஏற்றிவந்த லாரியை சாஜித் என்பவர் ஓட்டி வந்தார். இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் அதிக அளவில் கூடியிருந்ததால், டேங்கர் லாரியைப் பெட்ரோல் பங்க் வளாகத்தில் அவர் நிறுத்தியிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லாரியில் தீப்பிடித்தது.

இதையடுத்து, சமயோசிதமாகச் செயல்பட்ட சாஜித், தன்னுடைய உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் எரிந்துகொண்டிருந்த லாரியை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்க்கிலிருந்து வெளியேறினார். இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை அப்பகுதிவாசி ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். இதுகுறித்து பேசிய லாரி ஓட்டுநர் சாஜித், `பெட்ரோல் பங்க்கின் பாதாள டீசல் டேங்க்குக்கு அருகில் லாரியை நிறுத்தியிருந்தேன். லாரியில் திடீரெனத் தீப்பிடித்தத்தைப் பார்த்தவுடன், அதை வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். டீசல் டேங்கில் தீ பிடித்தால், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும்’’ என்றார். இந்தச் சம்பவத்தில் சாஜித்துக்கு கை மற்றும் முதுகுப் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!