வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (26/03/2018)

கடைசி தொடர்பு:14:19 (11/04/2018)

மரங்களை வெட்டாமல் தடுத்த சிப்கோ பெண்களின் புது வியூகம்! #ChipkoMovement

சிப்கோ

இந்த உலகின் பலவித மாற்றங்கள் பெண்களால்தான் நிகழ்ந்துள்ளது. வேட்டையாடும் முறையிலிருந்து விவசாய முறைக்கு மனிதர்கள் மாறியதற்குப் பெண்களே பிரதான காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மறுசுழற்சி எனும் பெருங்கொடையைப் பெண்களுக்குத்தான் இயற்கை அளித்துள்ளது. இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வு என்பது, ஆண்களைவிடப் பெண்களுக்கு இயல்பானது. இந்த அடிப்படையின் தொடர்ச்சியே இயற்கையைக் காக்க, சிப்கோ இயக்கமாகப் பெண்கள் அணிவகுத்தது. 

சிப்கோ இயக்கம், 18-ம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் தொடங்கப்பட்டது. எனினும், உத்திரகாண்ட் மாநிலத்தில் பெண்கள் நடத்திய போராட்டத்தின் மூலமே பலராலும் அறியப்பட்டது. இயற்கை வளம் நிறைந்தது, உத்தரகாண்ட் மாநிலம். அங்குள்ள காடுகளை மையப்படுத்தியே அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை நிலை அமைந்திருந்தது. 1973-74 ஆண்டுகளில், அந்த மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான உரிமம் சிலருக்கு வழங்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டு அந்தப் பகுதி மக்கள் துடிதுடித்தனர். தங்களின் வாழ்வாதாரம் பறிபோகப்போகிறது எனும் பதைப்பைக் காட்டிலும், தங்கள் உறவின் ஓர் அங்கமாக நினைக்கும் மரங்களை இழப்பதற்கு அவர்கள் மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனாலும், இந்தக் கொடுமையை எப்படித் தடுப்பது என்பதையும் அறியாமல் இருந்தனர். இறுதியாக, அவர்கள் எடுத்த புதுமையான போராட்ட உத்தி, பசுமையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியாக மாறியது. 

மரங்களை வெட்டுவதற்கு ஆள்கள் வந்ததும், அந்த ஊர்ப் பெண்கள் எல்லோரும் மரங்களைச் சுற்றிக் கைகோத்தபடி நின்றனர். அவர்களின் கண்களில் எதையும் எதிர்கொள்ளும் தீவிரம் ஒளிர்ந்தது. மரம் வெட்ட வந்தவர்கள், எவ்வளவு கூறியும் தங்களின் இணைந்த கைகளை விடுவதாக இல்லை. 'எங்களைக் கொன்றுவிட்டு மரங்கள் மீது ஆயுதங்களை வையுங்கள்' எனக் கொஞ்சமும் அச்சமின்றி சொன்னார்கள். அந்தப் பெண்களின் வைரம் போன்ற உறுதியைக் கண்டு, வெறுங்கையோடு திரும்பிவிட்டார்கள். 

`சிப்கோ' என்றால், `ஒட்டிக்கொள்ளுதல்' எனும் பொருள். இந்தப் பெண்கள், மரங்களை ஒட்டிக்கொண்டு அவற்றைக் காத்தது வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பதிவானது. இந்தப் போராட்டம் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி கவனத்துக்குச் சென்றது.    பின்னாளில் பத்திரிகையாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சுந்தர்லால் பகுகுணா, இந்தப் பெண்களின் போராட்டக் குணத்தை ஒருங்கிணைத்தார். இவரே, சிப்கோ இயக்கத்தை முன்னின்று வழிநடத்தினார். இமயமலைப் பகுதியில் உள்ள மரங்களைக் காப்பதற்காகப் பல மைல் தூரம் நடைபயணம் மேற்கொண்டார். அந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான பயிற்சிகளை அளிப்பதையும் தம் கடமையாகக் கொண்டிருந்தார். இதற்காக, அவர் பலவிதமான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும், அவருக்கு உற்ற தோழமையாக நின்றவர்கள் பெண்களே. ஏனெனில், இவருடன் இணைந்த ஆண்களில் ஒரு சிலர், பணம் மற்றும் மதுவுக்கு விலைபோயினர். ஆனால், லட்சியத்துடன் நேர்மையாகப் பயணித்தவர்கள் பெண்களே. தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்து, இயற்கையைக் காக்க தீவிரமாகப் பணியாற்றினர். அந்தக் குழு, `லேடி டார்ஜான்' என்று அழைக்கப்பட்டது. 

பெண்களின் இந்தப் போராட்டம், பொதுச்சமூகத்தை மட்டுமன்றி அரசையும் ஈர்த்தது. மரங்களை வெட்டும் முடிவை ரத்து செய்யவைத்தது. எந்தவொரு பெரிய வெற்றியும் எளிமையாகத்தான் தொடங்கியிருக்கும் என்பதற்கு சிப்கோ இயக்கப் பெண்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இன்று, அவர்களின் போராட்டத்தின் 45-வது ஆண்டு நினைவுகூர் தினம். இன்றும் பெண்கள் சந்திக்கும் முன்னெடுக்கும் போராட்டங்கள் பல. அதே உறுதியுடன் முயற்சிகள் வெல்லட்டும். 


டிரெண்டிங் @ விகடன்