``நான் தாலி வாங்கிட்டு இருந்தப்ப, அவளை அங்க கொன்னுட்டாங்க!’’ - ஆணவக்கொலையால் கதறும் ராணுவ வீரர்

கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தலித் சமூகத்தைச் சார்ந்த பிரிஜேஷுக்கும், ஈழுவச் சமூகத்தைச் சேர்ந்த ஆதிராவுக்கும் திருமண ஏற்பாடுகள் படுஉற்சாகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். பெண்ணுக்குத் திருமணப் புடவையும் தாலியும் மட்டுமே வாங்க வேண்டும். திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக உறவினர்களுடன் சென்று மணமகளுக்கான பட்டுப்புடவையும் தாலியும் வாங்கிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை பிரிஜேஷ்.  உறவினர்கள், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர். அப்போது டிவி-யில் ஸ்க்ராலிங் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அதில், `திருமணத்துக்கு ஒருநாள் முன்னதாக மணமகள் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி. அடுத்த வரியில் `கொல்லப்பட்டவரின் பெயர் ஆதிரா ராஜன்' எனக் கூறப்பட, திருமண வீட்டில் இருந்தவர்களுக்குக் கடும் அதிர்ச்சி. `மணப்பெண் ஆதிரா, குத்திக் கொலைசெய்யப்பட்டார்.  தந்தை ராஜனே ஆதிராவைக் கொன்றார்' என்ற கொடூரச் செய்தியை மாப்பிள்ளை பிரிஜேஷிடம் உறவினர்கள் பதறியபடி கூறினர். அலறித் துடித்த பிரிஜேஷ், சம்பவ இடத்துக்கு ஓடினார். ரத்த வெள்ளத்தில் ஆதிரா உயிரற்றுக் கிடக்க, பிரிஜேஷின் கல்யாணக் கனவு கலைந்தது. கடந்த வாரத்தில் கேரளாவை அதிரவைத்த ஆணவக்கொலை இது. 

ஆணவக் கொலையால் காதலியை பறிகொடுத்த ப்ரீஜேஷ்

photo courtesy : indian express

ராணுவ வீரரான பிரிஜேஷுக்கும் ஆதிராவுக்கும் மூன்று ஆண்டு காதல். கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் ஆதிரா டெக்னீஷியனாகப் பணிபுரிந்தார். பிரிஜேஷின் தாயார் வள்ளிக்கு, சிறுநீரகக் கோளாறு இருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் மெட்ராஸ் இன்ஜினீயர் பிரிவில் பணியில் இருந்த பிரிஜேஷ், அவரது தாயாரை ஆதிரா பணிபுரிந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பிரிஜேஷின் தாயாரை ஆதிரா அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக்கொண்டார். அந்தச் சமயத்தில்தான் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. மார்ச் 23-ம் தேதி பிரிஜேஷுக்கும் ஆதிராவுக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது. திருமணத்துக்காக 45 நாள்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பிரிஜேஷ் சொந்த ஊரான கொயிலாண்டிக்கு வந்தார். பிரிஜேஷ், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆதிரா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாயார் சுனிதா, ஆதிராவுக்கு ஆதரவாக இருந்தாலும் தந்தை ராஜனை எதிர்த்து அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ``பிரிஜேஷைத் திருமணம் செய்தால் இருவரையும் கொலை செய்துவிடுவேன்'' என்று ஆதிராவை அடிக்கடி மிரட்டிவந்தார் ராஜன். ஆதிராவோ தன் முடிவில் உறுதியாக இருந்தார். 

ராஜனின் மிரட்டல் குறித்து போலீஸுக்குத் தகவல் அளித்தார் பிரிஜேஷ். மணமகன் ராணுவ வீரர் என்பதால், போலீஸ் ஆதரவும் பிரிஜேஷுக்கு இருந்தது. உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மணப்பெண்ணின் தந்தை ராஜனை அழைத்து, ``திருமணத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது. இருவரும் மேஜர். அதனால், அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்ய இருவருக்கும் உரிமை உண்டு. நீங்கள் தவறாக ஏதாவது செய்தால், உங்களை கைதுசெய்யவேண்டியதிருக்கும்'' என்று எச்சரித்தனர். இருதரப்பிலும் சமாதானம் பேசப்பட்டது. ஆதிராவின் பெற்றோரும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். முதலில் பிரிஜேஷ் வீட்டில் வைத்து திருமணம் நடப்பதாக இருந்தது. ஆதிராவுக்கோ தன் சொந்த ஊரான அரிக்கூடு கிராமத்தில் திருமணம் நடைபெறவேண்டும் என விருப்பம். ஆதிராவின் பெற்றோரும் சமாதானமடைந்ததால் மணமகளின் சொந்த கிராமத்தில் வைத்து திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. மணப்பெண்ணின் தந்தை ராஜனிடம், திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததாக எழுத்துபூர்வமாகவும் போலீஸார் எழுதி வாங்கினர். `அப்பாடா பிரச்னை முடிந்தது!' என்று ஆதிரா சந்தோஷக் கனவுகள் சூழ, பெற்றோருடன் வீட்டுக்குச் சென்றார்.

ஆணவக்கொலை செய்யப்பட்ட ஆதிரா

ஆனால், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, மகளை மீண்டும் `டார்ச்சர்' செய்ய ஆரம்பித்தார் ராஜன். `எந்தக் காரணத்தைக்கொண்டும் இந்தத் திருமணம் நடக்காது' என்றவாரே... ஆதிராவை வீட்டுக்குள் வைத்துப் பூட்டினார். ராஜன் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்கள், வெளியே உள்ளவர்களுக்கும் தெரியவில்லை. 

விடிந்தால் திருமணம் என்ற நிலையில் 22-ம் தேதி இரவு குடித்துவிட்டு வந்த ராஜன், மகளுடன் தகராறில் ஈடுபட்டார்.  ஆதிராவோ தன் நிலையிலிருந்து மாறவே இல்லை. கோபத்தின் உச்சிக்குச் சென்ற ராஜன், ``நீ உயிரோடு இருந்தால்தானே இந்தக் கல்யாணம் நடக்கும்...'' என்று கூச்சலிட்டிருக்கிறார். மறைத்து வைத்திருந்த கத்தியால் பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல் குத்தியிருக்கிறார். வீட்டைவிட்டு வெளியே ஓடி, பக்கத்து வீட்டுக்குள் புகுந்தார் ஆதிரா. ஆத்திரம் தணியாத ராஜன், அங்கும் சென்று ஆதிராவை மீண்டும் மீண்டும் குத்த, ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஆதிரா, உயிர் பிரிந்தார். காதலித்த மகளை ஆணவக்கொலை செய்த ராஜனும் காதல் திருமணம் செய்தவர் என்பதுதான் இதில் கொடுமையிலும் கொடுமை.

கல்யாணக் கனவுடன் கிராமத்துக்கு வந்த பிரிஜேஷ், இப்போது செய்வதறியாது திரிகிறார். காதல் மனைவிக்காக வாங்கிய தாலியையும் பட்டுப்புடவையையும் கட்டிக்கொண்டு கதறும் அவரைத் தேற்ற முடியாமல் நண்பர்கள் தவிக்கின்றனர். ``என்னைப் போன்ற நிலை இனி யாருக்கும் வரக் கூடாது. தலித் என்றால் விரும்பியவரை திருமணம் செய்துகொள்ளக்கூட உரிமை இல்லையா?'' என்று பரிதாபத்துடன் கேட்கும் அவருக்குச் சரியான பதில் சொல்ல யாரும் இல்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!