கர்நாடகா தேர்தல் தேதியை முன்கூட்டியே கூறிய பா.ஜ.க!

கர்நாடகா தேர்தல் தேதி குறித்த தகவல்களை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே, பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். 

அமித் மாலவியா

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் காலம் வரும் மே 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய, இந்திய தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத், கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் தேதியை அறிவித்தார். அதில், `வரும் மே மாதம் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்' எனவும் தெரிவித்தார். 

ஓம்பிரகாஷ் ராவத்

அப்போது, கர்நாடகத் தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, சமூக வலைதளத்தில் தேர்தல் தேதியை அறிவித்துள்ளாரே அது எப்படி என்று நிருபர் ஒருவர் கேள்விக்குப் பதிலளித்த அவர், ``தேர்தல் அறிவிப்புகள் குறித்த சில விஷயங்கள் கசிந்துள்ளன. அதற்கான நடவடிக்கைகள் சட்டபூர்வமாகவும் நிர்வாக ரீதியாகவும் எடுக்கப்படும்’’ என்றார். 

பா.ஜ,கா-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக இருப்பவர் அமித் மாளவியா. இவர், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், `கர்நாடகாவில் தேர்தல் நடைபெறும் நாள் மே 12, 2018 மற்றும் வாக்கு எண்ணிக்கை மே 18, 2018' எனப் பதிவிட்டார். இப்பதிவுக்கு, பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து அப்பதிவை அவர் அகற்றிவிட்டார். 

இதேபோல், கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளத்தின் பொறுப்பாளராக இருப்பவரும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன்பே சமூக வலைத்தளத்தில் தேர்தல் தேதி குறித்த தகவலை கசிய விட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!