வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (27/03/2018)

கடைசி தொடர்பு:15:39 (27/03/2018)

`பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை மிகவும் குறைவு' - சொல்கிறார் அமித்ஷா

'பா.ஜ.க ஆட்சிசெய்யும் மாநிலங்களில், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது மிகவும் குறைவாகவே உள்ளது' எனப் பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அமித் ஷா

கர்நாடகா மாநிலத்துக்கு இன்று வந்த அமித்ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''பா.ஜ.க ஆட்சி செய்துவரும் குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ள விவசாயிகளின் தற்கொலை வழக்குகள் அனைத்தும் மன அழுத்தம், குடும்பப் பிரச்னைகள் போன்ற காரணங்களாகத்தான் நடந்துள்ளன.

மேலும், 'இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரை ஒன்றுபடுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பேசி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இந்துக்களிடையே பிளவை உண்டாக்கும் வகையில் கர்நாடகா முதல்வர் செயல்பட்டுவருகிறார். இத்தகைய உட்கட்சி மோதல்கள், எந்த ஒரு கட்சியிலும் ஏற்பட்டதில்லை' என சித்தராமையா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசை விமர்சித்துப் பேசினார் அமித்ஷா.