`எடியூரப்பா அரசு ஊழலில் நம்பர் ஒன் அரசு!’ - பிரஸ்மீட்டில் உளறிய அமித்ஷா (வீடியோ)

ஊழல் அரசுகளுக்கிடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசு நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும் எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா உளறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷா, எடியூரப்பா.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் மே 12-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 15-ல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சித்தராமையா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கிலும், இழந்த பெருமையை மீட்க வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க-வும் அம்மாநிலத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னர் பா.ஜ.க தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, எடியூரப்பா அரசு ஊழலில் நம்பர் ஒன் அரசு என்று உளறிய சம்பவம் நடந்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா, ``ஊழல் அரசுகளுக்கிடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுதான் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும்’’ என்று கூறினார். இதைக் கேட்ட பா.ஜ.க நிர்வாகிகள் உடனடியாக அவரைத் திருத்த முயன்றனர். அதன் பின்னர், சுதாரித்துக்கொண்ட அமித்ஷா, சித்தராமையா அரசு என்று குறிப்பிடவே தான் எண்ணியதாக விளக்கமளித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது எடியூரப்பாவும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவின் இந்த பேச்சை ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா, `சில நேரங்களில் அமித்ஷாவும் உண்மையைப் பேசுவார்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!