வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (27/03/2018)

கடைசி தொடர்பு:17:44 (27/03/2018)

மனைவி, குழந்தைகளை வைத்து சூதாட்டம் ஆடிய கணவர்! பஞ்சாயத்து வழங்கிய விபரீத தீர்ப்பு

மனைவி மற்றும் குழந்தைகளை வைத்து சூதாட்டத்தில் கணவரே ஈடுபட்டுள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. பஞ்சாயத்து வரை சென்ற இந்த விவகாரம், குழந்தைகளை மட்டும் சூதாட்டத்தில் வெற்றிபெற்றவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருப்பது மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

சூதாட்டம்

டெல்லி,புலந்த்ஷல் பகுதியைச் சேர்ந்தவர் மொஹ்சின். இவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைப் பணையப் பொருளாக சூதாட்டத்தில் வைத்து இம்ரான் என்பவருடன் விளையாடி உள்ளார். இந்தச் சூதாட்டத்தில், இம்ரானிடம் மொஹ்சின் தோற்றுப்போனதை அடுத்து, மொஹ்சின் வீட்டிற்குச் சென்ற இம்ரான், மொஹ்சினின் மனைவியை வலுக்கட்டாயமாக தன்னுடன் வருமாறு வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். 

இதனையடுத்து, இந்த விசயம் பஞ்சாயத்து வரை சென்றது. பஞ்சாயத்துத் தலைவர்கள் ஒன்றுகூடி, இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை வெற்றிபெற்றவரிடம் ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்து, இம்ரானிடம் ஒரு குழந்தையை ஒப்படைக்க உத்தரவிட்டனர். இம்ரானும் ஒரு குழந்தையைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். 2015ல் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், இரண்டு ஆண்டுகள் கடந்தும் பஞ்சாயத்து பிறப்பித்த உத்தரவால், இதுவரை யாரும் மொஹ்சின் மனைவிக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை.  

அதனால், விரக்தியடைந்த மொஹ்சின் மனைவி சி.ஜே.எம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மொஹ்சின் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது. மேலும்,மொஹ்சின் மனைவி அவரை விவாகரத்து செய்யவும் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், அவரின் கணவர் தலைமறைவாகி விட்டார்.