`உண்மையைத்தான் பேசியிருக்கிறார்!’: அமித்ஷாவைக் கலாய்த்த சித்தராமையா | He has spoken the truth: Siddaramaiah on Amit shah's remark

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (27/03/2018)

கடைசி தொடர்பு:20:20 (27/03/2018)

`உண்மையைத்தான் பேசியிருக்கிறார்!’: அமித்ஷாவைக் கலாய்த்த சித்தராமையா

எடியூரப்பா அரசு ஊழல் அரசு எனப் பா.ஜ.க தலைவர் அமித்ஷா உண்மையைத்தான் கூறியிருக்கிறார் எனக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். 

சித்தராமையா

Photo Courtesy: Twitter/ANI

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, எடியூரப்பா அரசு ஊழலில் நம்பர் ஒன் அரசு என்று உளறிய சம்பவம் நடந்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா, ``ஊழல் அரசுகளுக்கிடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுதான் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும்’’ என்று கூறினார். இதைக் கேட்ட பா.ஜ.க நிர்வாகிகள் உடனடியாக அவரைத் திருத்த முயன்றனர். அதன் பின்னர், சுதாரித்துக்கொண்ட அமித்ஷா, சித்தராமையா அரசு என்று குறிப்பிடவே தான் எண்ணியதாக விளக்கமளித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது பா.ஜ.க-வின் முதலமைச்சர் வேட்பாளரான எடியூரப்பா, அமித்ஷாவுக்கு அருகில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், ``அமித்ஷா உண்மையைத்தான் பேசியுள்ளார். அவர் கூறியது சரிதான். எடியூரப்பா அரசு ஊழலில் முதலிடம் பெற்ற அரசுதான்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

அமித்ஷா பேசிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் கர்நாடகத் தேர்தல் தேதியை அறிவித்த நிலையில், தேர்தல் பிரசாரம் தொடர்பாக எங்களது ரகசிய வீடியோவின் முன்னோட்டத்தை வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பா.ஜ.க தலைவர் அமித்ஷா பரிசாக அளித்தது அந்த வீடியோ. இதன்மூலம் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரை சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார். 

 


[X] Close

[X] Close