`9 மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க முடிவு' - அதிரடி காட்டும் கேரளா!

திருச்சூர், ஆலப்புழா, வயநாடு உள்ளிட்ட 9 மாவட்டங்களை வறட்சி நிலவும் மாவட்டங்களாக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. 

பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன், வேளாண் அமைச்சர் சுனில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், மொத்தம் 14 மாவட்டங்களில் 9 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆலப்புழா, கண்ணூர், இடுக்கி, காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. 

வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் போதிய மழைப்பொழிவு இல்லாதது, நிலத்தடி நீர் குறைந்தது உள்ளிட்டவை இதற்கு காரணங்களாகச் சொல்லப்பட்டுள்ளன. மேலும், இம்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு வெளிவந்த பின்னர், இம்மாவட்டங்களுக்கான நிவாரணத் தொகைகள் அறிவிக்கப்படவுள்ளன. பல்வேறு மாநிலங்களில் தங்களது பகுதிகளை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும், நிவாரணத் தொகை கோரியும் விவசாயிகள் போராடி வருகிறவேளையில், தாமாக முன்வந்து வறட்சி மாவட்டங்களை அறிவித்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!