வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (27/03/2018)

கடைசி தொடர்பு:21:20 (27/03/2018)

கர்நாடக தேர்தல் தேதி முன்கூட்டியே வெளியான விவகாரம்! விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்

கர்நாடகத் தேர்தல் தேதி அதிகாரபூர்வ வெளியீட்டிற்கு முன்னதாகவே வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையம் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. 

தலைமைத் தேர்தல் ஆணையம்


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத், ``கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 12-ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 15-ம் தேதி நடைபெறும்’’ என்று அறிவித்தார். அதேநேரம், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன்னதாகவே, கர்நாடகத் தேர்தல் மே 12-ம் தேதி நடைபெறும் என பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பக் குழுத் தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில், அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே கர்நாடகத் தேர்தல் தேதிகள் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் கொண்ட குழுவைத் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ``அதிகாரபூர்வ அறிவிப்பு முன்னதாக அமித் மால்வியா, கர்நாடகத் தேர்தல் தேதி குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதேபோல், மே 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே இதை பதிவிட்டதாகவும் மற்றொரு ட்வீட்டில் அவர் விளக்கம் அளித்திருந்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 15-ம் தேதி எண்ணப்படும் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, தனது விசாரணையை முடித்து 7 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். அதேபோல், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான யோசனைகளையும் அந்தக் குழு அளிக்கும். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் தேர்தல் ஆணையம் தரப்பில் ஏற்கெனவே விளக்கம் கோரப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.