கர்நாடக தேர்தல் அறிவிப்பால், காவிரி மேலாண்மை வாரியம் தாமதமாகுமா?

ஓ.பி. ராவத்

ர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 12-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, மே 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் புதுடெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத் தேர்தல் தேதியை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே, பி.ஜே.பி. தகவல்தொழில்நுட்ப பிரிவின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் தேதியை வெளியிட்டதால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையே கர்நாடக சட்டசபைத் தேர்தல் தேதி `லீக்' ஆனது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலைக் குறிவைத்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி-யின் தீவிர பிரசாரத்தை முறியடித்து மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. என்றாலும், அண்மையில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தவிர, கர்நாடக மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதன் மூலம் தென் மாநிலங்களில் பி.ஜே.பி. வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பி.ஜே.பி-யும், காங்கிரஸ் கட்சியும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. 

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் ஊழல் அதிகரித்துவிட்டதாக பி.ஜே.பி-யும், மத மோதல்களைத் தூண்டிவிடுவதாக காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டியுள்ளன. இந்த இரு கட்சிகளையும் தாண்டி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கர்நாடக தேர்தல் களத்தில் முக்கியப் பங்குவகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த சில மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி, பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பலமுறை கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.

இதற்கிடையே, கர்நாடக சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு, பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்து வருவதாக தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன.

எனினும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகத் தேர்தல் நடத்தை விதிகள் தடையாக இருக்காது என்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

கர்நாடக சட்டசபைத் தேர்தல் தேதியை பி.ஜே.பி. தகவல்தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அஜித் மால்வியா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ராவத் குறிப்பிட்டார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ``பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை சூப்பர் தேர்தல் ஆணையம் போன்று செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் கர்நாடக சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னரே பி.ஜே.பி. ஐ.டி பிரிவு வெளியிடுகிறது. எனவே, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை சோதனைக்கு உள்ளாகிறது. இதுபோன்ற முக்கியத் தகவலை வெளியிட்டதற்காக, பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா, தகவல் தொழில்நுட்பப் பிரிவி தலைவர் மால்வியாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்புமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத், ``சட்டப்பூர்வமாகவும், நிர்வாக ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி முன்கூட்டியே லீக் ஆனது குறித்து, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவுமான விஜயதரணியிடம் பேசினோம். 

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பேசிய விஜயதரணி - காங்கிரஸ் கொறடா``கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை பி.ஜே.பி. தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் வெளியிட்டிருப்பதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் தலையீடு, ஆளும் பி.ஜே.பி-க்குத் தேர்தல் ஆணையம் உதவும் தன்மை இவையெல்லாம் புலப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள், பல்வேறு மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களின் போது ஏற்கெனவே அறியப்பட்டதுதான். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் பி.ஜே.பி-யின் தாமரைச் சின்னம் விழும் வகையில் உள்ளதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில், வாக்குச்சீட்டு முறையே மீண்டும் வர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் இத்தகைய சூழ்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, பி.ஜே.பி.-யின் ஐ.டி. பிரிவானது ஒரு மாநிலத்தின் தேர்தல் தேதியை வெளியிடுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் தேர்தல் ஆணையமும், பி.ஜே.பி-யும் இணைந்து செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் இதுபோன்ற விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைப்பதற்குத் தேர்தல் ஆணையமே விலக்கு அளித்துள்ளது. கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, காவிரி தொடர்பான விவகாரத்தில் நடத்தை விதிமுறைகள் கட்டுப்படுத்தாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. அப்படிப்பட்ட நிலையிலும், மத்திய பி.ஜே.பி. அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஏன் தாமதிக்கிறது என்ற கேள்வி இங்கு எழுகிறது. அரசியல் காரணங்களுக்காகவே, பி.ஜே.பி. அரசு காவிரி விவகாரத்தில் தாமதமாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, காவிரி விவகாரத்தில் அம்மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள கட்சிகள் அனைத்தும், ஒருமித்த கருத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில், தமிழகச் சட்டசபையில், காவிரி விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவே செயல்பட்டுள்ளோம். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலிலும், இதே உறுதியுடன்தான் காங்கிரஸ் கட்சி செயல்படும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!