பா.ஜ.க-வை வீழ்த்த வியூகம் வகுக்கும் மம்தா பானர்ஜி | Mamata Banerjee to meet BJP's dissatisfaction leaders

வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (28/03/2018)

கடைசி தொடர்பு:14:12 (28/03/2018)

பா.ஜ.க-வை வீழ்த்த வியூகம் வகுக்கும் மம்தா பானர்ஜி

பா.ஜ.க-வின் அதிருப்தி தலைவர்களை இன்று நேரில் சந்திக்கவிருக்கிறார், மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அளவில் பா.ஜ.க-வை வீழ்த்த மற்ற எதிர்க்கட்சிகளுடன் கைகோத்துள்ளார்.  இதன் தொடக்கமாக, அனைத்து எதிர்க்கட்சித் தலைவரையும் முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்துவருகிறார். நேற்று, டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தி.மு.க எம்.பி., கனிமொழி, சிவசேனா கட்சியின் எம்.பி., சஞ்சய் ராவத் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார்.

இதற்கு முன்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சிக்கும், அவர்கள் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கொண்டுவர இருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கும் மம்தா ஆதரவு அளித்தார். இதைத் தொடர்ந்து, இன்று பல்வேறு அதிருப்தி பா.ஜ.க தலைவர்களைச் சந்திக்க உள்ளார். பா.ஜ.க-வில், மோடியைக் கடுமையாக விமர்சித்துவரும் யஸ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, அருண்சோரி ஆகியோருடன் மம்தா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இவர்களைத் தொடர்ந்து, காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சரியானவுடன், அவரையும் நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.