சிறப்பு அந்தஸ்துக்காக ‘நாரதர்’ வேஷம் போட்டு நாடாளுமன்றத்தில் அதிர்ந்த தெலுங்கு தேச எம்.பி

நாடாளுமன்றத்துக்கு வெளியில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., நாரமல்லி சிவபிரசாத், ‘நாரதர்’ போல வேடமணிந்து தெலுங்கானாவுக்கு சிறப்பு உரிமைகோரி போராட்டம் நடத்திவருகிறார்.

நாரதர்

ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம்குறித்த அறிவிப்புகள் வெளியாகாததால், மத்திய அரசின் பட்ஜெட்மீது தெலுங்கு தேசம் கட்சி அதிருப்தி தெரிவித்தது. அதன் விளைவாக சமீபத்தில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, அக்கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.  இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத பிரதமர் மோடிக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர ஆந்திரக் கட்சிகள் தீர்மானித்தன.

ஆனால், நாடாளுமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுவருவதால், நாடாளுமன்றம் இது வரை ஒருநாள்கூட முழுமையாக நடைபெறவில்லை. இதனால், பா.ஜ.க-வின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றுவதில் தாமதம் நிலவுகிறது. எனவே, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, தெலுங்கு தேசம் எம்.பி-க்களும் ஒருபுறம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர், இதன் ஒரு பகுதியாக, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி., நாரமல்லி சிவபிரசாத், ‘நாரதர்’ போன்று வேடமணிந்து சிறப்பு அந்தஸ்துக்காகப் போராடிவருகிறார். முன்னதாக இவர், இதே கோரிக்கையை வலியுறுத்தி பெண் வேடமணிந்து நாடாளுமன்றத்தில் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!