வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (28/03/2018)

கடைசி தொடர்பு:13:30 (28/03/2018)

தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க தடை! - பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

'டி.டி.வி. தினகரனுக்குத் தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும்' என்ற டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். 

டிடிவி தினகரன்

தங்கள் அணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கட்சிப் பெயரை வழங்க வேண்டும் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட, ’பிரஷர் குக்கர்’ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் அணியினர் இடைக்கால மனு ஒன்றை தாக்கல்செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என சமீபத்தில் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பில், “ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாகத்தான் போட்டியிட்டார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை எப்படி கட்சிக்கான சின்னமாக ஒதுக்க முடியும்? தவிர, தினகரன் கட்சி துவங்கும் முன்பே குக்கர் சின்னத்தை ஒதுக்கி, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியாகாது”என்ற வாதம் வைக்கப்பட்டது. 

இந்நிலையில், 'டி.டி.வி. தினகரனுக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும்'என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, தினகரனுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.