காஷ்மீர் டு கன்னியாகுமரி வரை தனியே சைக்கிளிங் செய்யும் புனே ப்ரதிபாவின் நோக்கம் என்ன?

ப்ரதிபா

“காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளிங் பண்ணும் என் முயற்சியில் அரசாங்கத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய நோக்கம் இருக்கு. இதோ, என் பயணத்தை முடிக்கப்போறேன்” என்கிற ப்ரதிபா தாகானே குரலில் இருக்கும் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. புனேவைச் சேர்ந்த 33 வயதாகும் ப்ரிதிபா தாகானே, பிப்ரவரி 24-ம் தேதி காஷ்மீரிலிருந்து சைக்கிளிங் தொடங்கினார். 

இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 24,000 சைக்கிளிஸ்ட்கள் பயணத்தின்போது உயிர் இழந்துள்ளனர். காரணம், சைக்கிளிங் செய்வதற்கான முறையான பாதுகாப்பான பாதைகள் இல்லாதது. நடைபாதை, இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான பாதைகள் இருப்பதுபோல, சைக்கிளிங் செய்பவர்களுக்கான பாதைகள் இந்தியாவில் இல்லை. பிரபல சைக்கிளிஸ்ட் அசோக் காலே (Ashok Khale), 2017 நவம்பரில், சியோன்-பன்வேல் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ‘சைக்கிளிங் செய்பவர்களுக்கு தனி பாதை, பாதுகாப்பான பாதை அமைக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தியே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் ப்ரிதிபா தாகானே. 

ப்ரதிபா

”புனேதான் என் சொந்த ஊர். வாழ்க்கையில் ஏதாவது புதிதாக செய்யணும் என்கிற எண்ணம் எனக்குள் பல ஆண்டுகளாக உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் பணியாற்றிய வேலையிலிருந்து விலகிவிட்டேன். டார்ஜிலிங்கில் இருக்கும் ஹிமாலயன் மவுண்டனியரிங் கோர்ஸில் (Himalayan Mountaineering Course) சேர்ந்து, பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு லெவல் முடித்தேன். 2017 செப்டம்பரில், மவுண்ட் டியோடிப்பா (Mount.Deotibba) இடத்தில் நடந்த மலையேற்ற முகாமில் பங்கேற்றேன். அதில் பங்கேற்ற எட்டு பேரில், மூன்று பேர் மட்டுமே 6001 மீட்டர் உயரம்கொண்ட அந்த மலையில் வெற்றிகரமாக ஏறி முடிச்சாங்க. அதில், நானும் ஒருத்தி. அப்புறம், சைக்கிளிங் மேலே ஆர்வம் ஏற்பட்டது. புனேவில் அஷ்ட விநாயகர் எனப்படும் எட்டு விநாயகர் கோயில்கள் இருக்கு. அந்த எட்டு கோயில்களுக்கும் சைக்கிளிங் போனேன். அந்தச் சமயத்தில்தான், அசோக் காலே இறந்த செய்தியைப் படிச்சேன். சைக்கிளிஸ்ட்களுக்கு சரியான சாலைகள் இல்லாத விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். இதுபற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்தவே இந்தப் பயணம்” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறார் ப்ரதிபா. 

ஒரு தனி மனுஷியா 3700 கிலோமீட்டர் (காஷ்மீர் டு கன்னியாகுமரி) பயணிக்கும்போது நிறையச் சவால்கள் இருக்குமே..

''ஆமாம்! நான் சில விஷயங்களில் கவனமா இருப்பேன். ஒரு நாளில் 125 முதல் 150 கிலோமீட்டர் வரையே சைக்கிள் ஒட்டுவேன். காலையில் 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 9 மணி வரையே ஓட்டுவேன். தங்கும் விஷயத்தில் எனக்கு உதவுவது இரண்டு விஷயங்கள்தான். ஒன்று, சமூக வலைத்தளம். இன்னொன்று, சைக்கிளிங் செய்பவர்களுக்காக இயங்கும் சைக்கிளோப் (cyclop) என்கிற கிளப். இதன்மூலம் நண்பர்கள் வீடு அல்லது ஹோட்டல்களைக் கண்டுபிடிப்பேன். அங்கேயே சாப்பிடுவேன். சைக்கிளிங்கில் பெண்களுக்கான கூடுதல் சவால், பீரியட்ஸ். நான் டாம்பூன்ஸ் பயன்படுத்துகிறேன். அது, ஆறு மணி நேரம் வரை தாங்கும். அதனால், என் பயணங்கள் இனிமையா போகுது” என்று குஷியாக கூறுகிறார். 

ப்ரதிபா

சைக்கிளிங் செய்பவர்களுக்காகப் பாதுகாப்பான சாலைகளையும் விதிமுறைகளையும் அமைக்கும் நோக்கத்துடன் தொடங்கிய இவரது பயணத்தில் சந்தித்த சாலைகள் குறித்துப் பேசும்போது, “பலவிதமான அனுபவங்கள் கிடைத்திருக்கு. ராஜஸ்தான் சாலைகள் முழுவதுமே ரொம்ப கரடுமுரடா இருந்தன. ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் அந்தப் பாதைகளில் சைக்கிளிங் செய்தேன். ஓரளவு நல்ல பாதைகள் இருந்த இடம், உதய்பூரிலிருந்து ஷம்லாஜி செல்லும் நெடுஞ்சாலை வழிகள். தமிழ்நாடும் நல்லாதான் இருக்கு. என் இந்தப் பயணத்தின் மூலமா சைக்கிளிங் பாதைக்கான மாற்றம் நடந்தால் மகிழ்வேன்" என்கிறார் ப்ரதிபா. 

ப்ரதிபா

இந்தப் பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த திட்டம் பற்றிய கனவும், ப்ரதிபா மனதில் எழுந்துள்ளது. "நான் இந்தப் பயணத்தை தொடங்கியபோது, யாரும் பெருசா ஊக்கபப்டுத்தலை. நான் பயணத்தை முடிப்பேன் என்றும் நம்பவில்லை. ஆனால், இப்போ நிறைய நண்பர்கள், நல்ல மனிதர்களின் அறிமுக கிடைத்துள்ளது. இது பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. அசோக் காலே வெளிநாடுகளுக்கு சைக்கிளில் பயணம் செய்துள்ளார். நானும் அதுபோல பயணம் செய்ய வேண்டும். மன உறுதியும் நம்பிக்கையும் அதை சாத்தியப்படுத்தும் என நினைக்கிறேன்" என்கிறார் இந்தச் சாகச பறவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!