கேரளாவில் மறைந்த மனிதநேயம் - வைரலாகும் வீடியோ

65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி, சாலையில் அடிபட்டுக் கிடந்துள்ளார். ஆனால், அவரை யாரும் மதிக்காமல் சாலையைக் கடந்து செல்லும் சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளா, திருவனந்தபுரத்தில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரின்மீது மோதி கீழே தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுள்ளனர். இந்தக் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

அந்தக் கேமராவில் பதிவான காட்சிகளில், மூதாட்டி ஒருவர் கையில் ஒரு பையுடன் தள்ளாடிக்கொண்டு மிகவும் மெதுவாகச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அந்த மூதாட்டியின்மீது வாகனத்தால் மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டனர். அந்த மூதாட்டி மயங்கிய நிலையில் சாலையின் நடுவே அப்படியே விழுந்து கிடக்கிறார். அந்தச் சாலை எப்போது வாகனம் மற்றும் மனித நடமாட்டம் தொடர்ந்து இருக்கும் சாலையாக உள்ளது. அப்பகுதிகளில் வரும் இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் ஆகியவை மூதாடியைக் கடந்து செல்லும்போது ஒரு விநாடி நின்று அவரின் நிலையைப் பார்த்துவிட்டு சென்று விடுகின்றனர். அப்பகுதியில் உள்ளவர்களில் ஒருவர்கூட உதவிக்கு வரவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த மூதாட்டிக்கு உதவி செய்ய முன் வந்து ஓர் ஆட்டோவை நிறுத்துகின்றனர். அதற்குள் சம்பவ இடத்துக்கு அப்பகுதி போலீஸ் வந்துவிடுகின்றனர். பிறகு ஆட்டோவில் ஏற்றி அந்த மூதாட்டியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர்.

பிறகு இது குறித்துப் பேசிய கடக்காவூர் போலீஸார், சாலையில் கிடந்த மூதாட்டியின் பெயர் பினோமினா என்றும் அப்பகுதி மக்களே ஒரு போலீஸுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறினர். மேலும், விபத்து ஏற்படுத்தியவர்களைக் கைது செய்து வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

video Credit : News Minute

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!