வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (28/03/2018)

கடைசி தொடர்பு:17:33 (28/03/2018)

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் இரட்டிப்பாகிறது எம்.எல்.ஏ-க்களின் ஊதியம்!

எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தை இரட்டிப்பாக்கும் புதிய சட்ட மசோதா கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

கேரள சட்டப்பேரவை 

எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், கொறடா உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் படி உள்ளிட்ட தொகைகளையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கான ஊதியம் ரூ. 55,000-லிருந்து, ரூ.90,500 ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல், எம்.எல்.ஏ-க்களுக்கான ஊதியம் ரூ.39,500-லிருந்து, ரூ.70,000-மாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி, ஜே.எம். ஜேம்ஸ் கமிஷன் அறிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், அமைச்சர்களுக்கான மாதாந்தர பயணப்படி ரூ.12,000-லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படுகிறது. எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ. 12,000-லிருந்து, ரூ.25,000-மாகவும் உயர்த்தப்படுகிறது. அதேபோல், சட்டப்பேரவை தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க மாநிலத்துக்குள் மற்றும் மாநிலத்துக்கு வெளியே விமானப் பயணம் மேற்கொள்வதற்காக எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்படும் பயணப்படி ஆண்டுக்கு ரூ.50,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், எம்.எல்.ஏ-க்களுக்கான அதிகபட்ச மாதாந்தர ஓய்வூதியத் தொகை ரூ.50,000-மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5.25 கோடி கூடுதலாகச் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக எம்.எல்.ஏ-க்களுக்கு சமீபத்தில் ஊதியம் இரட்டிப்பாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.