வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/03/2018)

கடைசி தொடர்பு:21:00 (28/03/2018)

`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு

உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்து வரும் இந்தியாவில், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. 

பால் உற்பத்தி

இந்தியாவின் பால் உற்பத்தியானது, கடந்த 1991-1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி குறித்து, தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தியானது 2016-2017ம் ஆண்டில் 165 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 

மேலும், 2015ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா- 95 மில்லியன் டன், சீனா - 43 டன், பாகிஸ்தான் - 42 டன் மற்றும் பிரேசில் - 32 டன் பால் உற்பத்தி செய்துள்ளன. இந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும், இந்தியாவில் பால் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் பஞ்சாப், அடுத்தடுத்த இடங்களில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. 

இந்த நிலையில், பால் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தபோதும், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. இதிலும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான், ஒரு நபருக்கு தினசரி 500 கிராம் அளவிலான பால் கிடைக்கப்பெறுகிறது.