`மஞ்சுவாரியரின் சதியால்தான் நடிகை கடத்தல் வழக்கில் திலீப் சிக்கினார்!’ - குற்றம்சாட்டப்பட்டவர் பரபரப்பு பேட்டி

நடிகையும் முன்னாள் மனைவியுமான மஞ்சு வாரியார் சதியால், கேரள நடிகை கடத்தல் வழக்கில் அப்பாவியான நடிகர் திலீப் சிக்கிக் கொண்டதாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மார்ட்டின் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

நடிகை மஞ்சுவாரியர்

கேரளாவை பரபரப்புக்கு உள்ளாக்கிய, நடிகை கடத்தல் சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி நடைபெற்றது. ஷூட்டிங் முடித்து விட்டு கொச்சினில் இருந்து திருச்சூர் சென்ற அவரை, ஒரு கும்பல் கடத்தியதுடன், அவரை அடித்து உதைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது. அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டது. இது தொடர்பாக அந்த நடிகை அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் டிரைவராக வேலை செய்தவரான பல்சர் சுனில் என்பவருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் திலீப் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் திலீப் 8-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, 85 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வீடியோ ஆதரத்தின் நகல் தனக்கு வேண்டும் என நடிகர் திலீப் தரப்பில் கோரப்பட்டத்தை எர்ணாக்குளம் மாவட்ட தலைமை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், கேரள உயர் நீதிமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்து நடிகர் திலீப் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதன் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், எர்ணாக்குளம் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ’நடிகர் திலீப் தரப்பில் கோரியுள்ள ஆவணங்களில் எதை எல்லாம் கொடுக்க முடியும்? தர இயலாத ஆவணங்களுக்கான காரணம் என்ன?’ என்பது தொடர்பான பட்டியலைக் கொடுக்குமாறு நடிகையின் தரப்பு வக்கீலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை ஏப்ரல் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. 

திலீப்

இதனிடையே, இந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 2-வது குற்றவாளியான மார்ட்டின், நீதிமன்றத்துக்கு வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ’இந்த வழக்கின் பின்னணியில் திரைத்துறையினர் அனேகர் இருக்கிறார்கள். நடிகை மஞ்சு வாரியார், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன், நடிகை ரம்யா நம்பீசன், நடிகர் லால் ஆகியோரின் சதியால் நடிகர் திலீப் இந்த வழக்கில் சிக்கிக் கொண்டார். அப்பாவியான நானும் இந்த வழக்கில் அவர்களாலேயே சிக்க வைக்கப்பட்டேன். இந்த செயலில் ஈடுபட்டதற்காக நடிகை மஞ்சு வாரியாருக்கு மும்பையில் ஃபிளாட்டும் ’ஒடியன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் முடிவில் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். நீதிமன்ற வளாகத்தில் குற்றம்சாட்டப்பட்ட மார்ட்டின் பேசிய இந்த விவகாரம்  கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!