வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (29/03/2018)

கடைசி தொடர்பு:10:08 (29/03/2018)

``காவிரிக்காக வீடுகள்தோறும் கறுப்புக்கொடி...நடுங்கட்டும் நரேந்திர மோடி!” - ராமதாஸ் #WeWantCMB

காவிரி

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் அறிக்கை என்றால் எப்போதுமே சூடாகத்தான் இருக்கும். அதிலும் தற்போது, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை, மத்திய அரசுக்குச் சாட்டையடி. அத்தோடு, தமிழக மக்களின் பொதுப்பிரச்னையான இந்தக் காவிரிப் பிரச்னைக்காக கறுப்புக் கொடி ஏற்றவும் அழைப்புவிடுத்துள்ளார். அவருடைய அறிக்கையிலிருந்து.... 

``காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29 அன்று முடிவடையும் நிலையில், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. காவிரிப் பிரச்னையில் தமிழ்நாட்டு மக்களின் முதுகில் மீண்டும் ஒருமுறை குத்த மத்திய பி.ஜே.பி அரசு தயாராகிவிட்டதாகவே தோன்றுகிறது. இது மன்னிக்க முடியாத துரோகம். 

1971 ம் ஆண்டிலிருந்து நடத்திய சட்ட மற்றும் உரிமைப் போராட்டத்தின் பயனாகவே 1990 ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இடைக்காலத் தீர்ப்பை 1991 ம் ஆண்டு அளித்த நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கான காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க 7 ஆண்டுகள் ஆனது. அப்போதும்கூட அதிகாரமுள்ள ஆணையமாக இல்லாமல், பல் இல்லாத அரசியல் அமைப்பாகவே அது இருந்தது. 

2007 ம் ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின் 11 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இன்றுவரை அத்தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மத்தியில் ஆட்சி செய்த அரசியல் கட்சிகள், தங்களின் கர்நாடக அரசியல் நலனைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் பாசன நலனைப் பலி கொடுத்தனர். காவிரிப் பிரச்னையைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்தவர்களில் வி.பி.சிங் தவிர மற்ற அனைவரும் தெரிந்தே தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்தவர்கள்தாம். இதை எவரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. 

ராமதாஸ்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில்கொண்டு மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்தது. இப்போதும், அதாவது எதிர்வரவிருக்கும் கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில்கொண்டு, நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் தமிழகத்தை வஞ்சிக்கிறது. 

ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி கடந்த பிப்ரவரி மாதம் 16 ம் தேதி உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அதைச் செயல்படுத்துவது பற்றி நரேந்திர மோடி இன்றுவரை ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவரது அமைச்சரவை சகாக்களும், அதிகாரிகளும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு மக்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறார்களே தவிர, மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பையே மத்திய அரசு மதிக்காமல் காலில் போட்டு மிதித்தால் தமிழகமும், தமிழக மக்களும் காவிரிப் பிரச்னையில் நீதி கேட்டு வேறு எங்கு செல்ல முடியும்? 

காவிரி ஆற்றைக் கர்நாடகம் நம்பியிருப்பதைவிடத் தமிழகம்தான் கூடுதலாக நம்பியிருக்கிறது. தமிழகத்தில் பாசனத்துக்காக 19 மாவட்டங்களைச் சேர்ந்த 20 லட்சம் விவசாயக் குடும்பங்களும், குடிநீர்த் தேவைக்காக சென்னை, மதுரை உள்ளிட்ட 7 மாநகராட்சிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி பேரும் காவிரியை நம்பியுள்ளனர். 

கர்நாடக மாநிலத் தேர்தல் வெற்றிக்காக ஒரு மாநிலத்தின் மக்களும், விவசாயிகளும் இறந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு மத்திய ஆட்சியாளர்களின் மனம் கல்லாக மாறியிருக்கிறது. அவர்களின் துரோகத்துக்குத் தமிழகத்தை ஆளும் அடிமை பினாமிகளும் துணை போய்க்கொண்டிருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்த துரோகத்தைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் முதல்கட்டமாக வரும் 30 ம் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்த வேண்டும். இது அரசியலுக்காகவோ, அரசியல் கட்சியின் சார்பிலோ நடத்தப்படும் போராட்டம் அல்ல. உழவர்களுக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டம்!''

இவ்வாறு ராமதாஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.


டிரெண்டிங் @ விகடன்