அம்பேத்கர் பெயரில் `ராம்ஜி' சேர்த்தது உ.பி அரசு! | up gov passes order to officially introduce word ‘Ramji’ for ambedkar

வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (29/03/2018)

கடைசி தொடர்பு:11:26 (29/03/2018)

அம்பேத்கர் பெயரில் `ராம்ஜி' சேர்த்தது உ.பி அரசு!

டாக்டர் அம்பேத்கர் பெயரின் நடுவில், `ராம்ஜி' என்ற பெயரைச் சேர்க்க உத்தரப்பிரதேச மாநில அரசு அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளது. 

யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சிசெய்துவருகிறது. டாக்டர்.பீம்ராவ் அம்பேத்கர் என்ற பெயரை, டாக்டர்.பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவுசெய்திருந்தது. 

இந்நிலையில், அம்பேத்கர் பெயரில் மாற்றம் செய்வதுகுறித்து, உ.பி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், லக்னோ மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னரே, அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற புதிய பெயரை நடுவில் சேர்க்க முடிவானது. 

அம்மாநில ஆளுநர் ராம் நாயக்கின் பரிந்துரையில், உ.பி அரசு ஆவணங்களில் உள்ள அம்பேத்கரின் பெயரில் `ராம்ஜி' என்ற புதிய பெயரைச் சேர்த்து, டாக்டர்.பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, காரணம் மகாராஷ்டிராவின் பொதுவான நடைமுறைப்படி, தந்தையின் பெயர் நடுவில் சேர்க்கப்படுவது வழக்கம். அதனால்தான், அம்பேத்கர் பெயரின் நடுவில், அவரது தந்தை பெயரான ராம்ஜியை சேர்த்துள்ளோம் என்று விளக்கமளித்துள்ளனர். மேலும், அரசியலமைப்பு ஆவணங்களில்  ’பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்றே அம்பேத்கர்  கையொப்பமிட்டுள்ளதாக அம்மாநில அரசு குறிப்பிட்டுள்ளது. 

அம்பேத்கரின் ஆங்கிலப் பெயரில் எவ்வித எழுத்து மாற்றமும் செய்யப்படாமல், ஹிந்தி மொழியில் ( Aambedkar) என எழுத்து மாற்றம் செய்துள்ளது. அம்பேத்கர் பெயரை, Dr Bhimrao Ramji Aambedkar என மாற்றம் செய்ய அம்மாநில அரசு, அனைத்துத் துறைகளுக்கும் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.