வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (29/03/2018)

கடைசி தொடர்பு:17:10 (29/03/2018)

’மோடி ஏழைகளுக்கு ஒன்றும் செய்யமாட்டார்!’ - பா.ஜ.க எம்.பி-யால் மீண்டும் சர்ச்சையில் மாட்டிய அமித்ஷா

கர்நாடகா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அமித்ஷா பேசியதை கன்னடத்தில் மொழிபெயர்த்த எம்.பி ஒருவர், 'மோடி, ஏழைகளுக்கும் பட்டியலின மக்களுக்கும்  ஒன்றும் செய்ய மாட்டார்' என மாற்றித் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமித்ஷா

கர்நாடகா மாநிலத்தில், வரும் மே 12- ம் தேதி, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு இப்போதிலிருந்தே அனைத்துக் கட்சிகளின் பிரசாரப் பணிகளும் தொடங்கியுள்ளன. கர்நாடகாவில், தற்போது காங்கிரஸின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. வரும் தேர்தலில், அங்கு பா.ஜ.க ஆட்சியமைக்க எல்லாவித பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ள பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, அங்கு பல பகுதிகளுக்குச் சென்று தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் ஒரு பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ’சித்தராமையா ஏழைகளுக்கும் பட்டியலின மக்களுக்கும் எந்த நன்மையும் செய்யமாட்டார்’ எனப் பேசினார். இதை, கன்னடத்தில் மொழி பெயர்த்த எம்.பி ஒருவர், ’மோடி ஏழைகளுக்கும் பட்டியலின மக்களுக்கும் ஒன்றும் செய்ய மாட்டார்’ என மாற்றிக் கூறிவிட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட எம்.பி., பிறகு சரியாகக் கூறினார். இது, சமூக வலைதளங்களில் வைரலாக மாறியுள்ளது. 

இதற்கு முன்னர், சித்தராமையா ஊழலில் நம்பர் ஒன் என விமர்சிப்பதற்குப் பதிலாக, எடியூரப்பா ஊழலில் நம்பர் ஒன் என்று உளறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது. அந்தப் பரபரப்பு ஓய்வதற்குள் மீண்டும் சர்ச்சையில் சிக்கிவிட்டது பா.ஜ.க!