`இந்த ஆட்சியில் அனைத்துமே லீக்!’ - மோடியைக் கலாய்த்த ராகுல்

’மோடி தலைமையிலான ஆட்சியில்தான் அதிகமாகத் தகவல்கள் `லீக்' ஆகி வருகிறது. காவலர் பலவீனமாக இருந்தால் இப்படித்தான் அனைத்தும் லீக் ஆகும்’ என மோடியை விமர்சித்து ட்வீட் ஒன்றைத் தட்டியுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி

சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வானது கடந்த 5-ம் தேதி அன்று தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு நடந்த 12-ம் வகுப்பு பொருளியலுக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு கேள்வித்தாள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானதாகப் புகார் எழுந்தது. இதேபோல், 10ம் வகுப்பு கணக்குத் தேர்வுக்கான கேள்வித்தாளும் வெளியாகியது. 

இதனையடுத்து, 12ம் வகுப்பு பொருளியல் பாடம் மற்றும் 10ம் வகுப்பு கணக்குப் பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட பாடங்களுக்கு மறுதேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கேள்வித்தாள் வெளியானது என்ற செய்தியைக் கேட்டதற்குப் பிறகு என்னால் தூங்க முடியவில்லை என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், `தகவல் லீக், ஆதார் தகவல் லீக், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு வினாத்தாள் லீக், தேர்தல் தேதி லீக், தற்போது சிபிஎஸ்இ கேள்வித்தாள் லீக். அனைத்துமே லீக். காவலர் பலவீனமாக இருந்தால் இப்படிதான் அனைத்தும் லீக் ஆகும்' என மோடி அரசைக் குற்றம்சாட்டி ட்வீட் செய்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!