வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (30/03/2018)

கடைசி தொடர்பு:08:28 (30/03/2018)

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு அனுமதி!

நெஞ்சுவலி காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

லாலு பிரசாத் யாதவ்

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவிற்கு, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 24.03.2018 அன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 14 வருட சிறைத் தண்டனையும், 60 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. ஏற்கெனவே, மாட்டுத்தீவன ஊழல் வழக்குகள் மூன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனைப் பெற்ற லாலு பிரசாத் யாதவ் , மாட்டுத்தீவன ஊழலின் நான்காவது வழக்கான தும்கா கருவூல வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

தற்போது லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் சிறைத் தண்டனை அனுபவித்துவருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள  மருத்துவ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். தற்போது, மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

அவரது உடல் நிலைகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. அதில், “அவருக்கு நோய்த் தொற்றும், அதிகப்படியான சர்க்கரையும் உள்ளது. சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவரும் லாலுவை மத்திய அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா, எய்ம்ஸ் மருத்துவமனை சென்று நேற்று நலம் விசாரித்தார்.