ஏன் இவ்வளவு தாமதம்? - ஃபிளிப்கார்ட் ஊழியரை கத்தியால் தாக்கிய பெண்

ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போன் தாமதமாக டெலிவரி செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பெண், போன் டெலிவரி செய்த இளைஞரை 20 முறை கத்தியால் குத்தியுள்ளார். 

பிளிப்கார்ட் டெலிவரி

டெல்லியைச் சேர்ந்தவர், கமல் தீப் (30). இவர், ஃபிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவர், ஆர்டர் செய்த நாளிலிருந்து அவருக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் போன் வந்துசேரவில்லை. அதனால், கமல் தீப் உடனடியாக ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். 

அப்போது, அவரிடம் பேசிய வாடிக்கையாளர் சேவை ஊழியர், ''ஆர்டர் செய்த மொபைல் போன் குறிப்பிட்ட தேதியில் வந்துவிட்டது'' என்று கூறி, டெலிவரி பையனின் பெயர் கேஷவ் (28) என்றும், அவரின் தொலைபேசி எண்ணைக் கமல் தீப்பிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த எண்ணிற்குத் தொடர்புகொண்டு பேசிய கமல், போனை வீட்டுக்குக் கொண்டுவரும்படிக் கூறியுள்ளார். 

கமல் தீப் வீட்டின் சரியான முகவரி தெரியாத நிலையில், 2 நாள்களாக போனை வைத்திருந்த கேஷவ், ஒருவழியாக கமல் தீப்பின் முகவரியைக் கண்டுபிடித்து, மொபைல் போனை கொடுத்துள்ளார். 21-ம் தேதி கிடைக்கவேண்டிய போன், மிகவும் தாமதமாகக் கிடைத்ததால், கடும் கோபத்தில் இருந்த கமல் தீப், கேஷவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

ஒரு கட்டத்திற்குமேல் வாக்குவாதம் முற்றவே, வீட்டின் உள்ளே சென்று கத்தியை எடுத்துவந்து சுமார் 20 முறை கேஷவ்வைக் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கேஷவ், சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் போலீஸார், கமல் தீப் மற்றும் அவரின் சகோதரர்  ஜிதேந்தர் சிங்கையும் கைது செய்துள்ளனர்.  மேலும், இச்சம்பவம் தொடர்பாக அங்கிருக்கும் சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். 

இதுகுறித்து ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ட்விட்டரில் ‘எங்கள் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அவரின் மீண்டு வர நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்யும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!