`கொந்தளித்த சி.பி.எஸ்.இ மாணவர்கள்' பிரகாஷ் ஜவடேகர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாள் வெளியானதைக் கண்டித்து, டெல்லியிலுள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டின் முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அவரின் வீட்டைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

சி.பி.எஸ்.இ வினாத்தாள்

12 ம் வகுப்பு பொருளியல் மற்றும் 10ம் வகுப்பு கணக்குப் பாடத்தின் தேர்வுத்தாள், உள்ளிட்டவை தேர்வு நாளுக்கு ஒருநாள் முன்பாக இரவு வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது. முதலில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த சி.பி.எஸ்.இ அதன்பின் ஒத்துக்கொண்டது. இதனையடுத்து, நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு பொருளியல் மற்றும் 10ம் வகுப்பு கணக்கு ஆகிய தேர்வுகளை ரத்து செய்தது. ரத்து செய்த தேர்வுகளுக்கான மறுதேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ தெரிவித்தது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

தேர்வுத்தாள் வெளியானதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக வசைபாடி வந்தநிலையில், சி.பி.எஸ்.இ-க்கு எதிராக டெல்லியில் இன்று பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.பி.எஸ்.இ செய்த தவற்றுக்கு நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று மாணவர்களுடன் பெற்றோர்களும் இணைந்து தேர்வுத்தாளை வெளியிட்ட குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனையை வழங்க வேண்டும் எனக் கோஷம் போட்டனர்.  

ஆர்ப்பாடத்தின் அடுத்தகட்டமாக, பிரகாஷ் ஜவடேகர் வீட்டை நோக்கி பேரணியாகச் செல்ல முயற்சி செய்தனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரின் வீட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், சி.பி.எஸ்.இ தலைமை அலுவலகத்தையும் மாணவர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வுத்தாள் வெளியானது தொடர்பாக போலீஸாரிடம் சி.பி.எஸ்.இ புகார் அளித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் 50 நபர்கள் அடங்கிய 10 வாட்ஸ் அப்  குரூப்பில் வினாத்தாள் வெளியாகி உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!