``குழந்தைக்குப் பாலூட்டுகிற மாதிரி டி.பி. வெச்சேன்... எனக்குக் கிடைச்சதெல்லாம்...'' - ஒரு தாயின் அதிர்ச்சி | A mother shares her horrific experience of uploading a breast-feeding picture in Facebook!

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (31/03/2018)

கடைசி தொடர்பு:12:33 (31/03/2018)

``குழந்தைக்குப் பாலூட்டுகிற மாதிரி டி.பி. வெச்சேன்... எனக்குக் கிடைச்சதெல்லாம்...'' - ஒரு தாயின் அதிர்ச்சி

``தனக்குப் பசிக்கிறபோது, அம்மாவிடம் தாய்ப்பால் குடிப்பது என்பது, ஒவ்வொரு குழந்தையின் உரிமை. அந்த நேரத்தில் அம்மா வீட்டுக்குள் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி. நம் ஊர்களில் பிரெஸ்ட் ஃபீடிங் ரூம்கள் இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் பத்திரமாகப் பூட்டியிருக்கின்றன. வெளியிடங்களில் குழந்தைக்குப் பசிக்கும்போது, பொது இடத்தில் உட்கார்ந்து பாலூட்டினால் வெறித்துப் பார்க்கிறீர்கள். தாய்ப்பால் என்பது குழந்தையின் உணவு. ஆனால், `அதை மறைவாக டாய்லெட்டில் உட்கார்ந்து கொடு' என்கிறீர்கள், `டிரையல் ரூமுக்குள் உட்கார்ந்து பாலூட்டு' என்கிறீர்கள். நீங்கள் டாய்லெட்டுக்குள் உட்கார்ந்து உங்கள் உணவைச் சாப்பிடுவீர்களா?'' - இரவு ஒன்பதரை மணிக்கு, தன் மூன்று வயது குழந்தையைத் தட்டி தூங்கவைத்தபடியே பேசும் பிரியதர்ஷினி கேள்வியில் நிறைய நியாயம் இருக்கிறது. 

குழந்தை

குழந்தைக்கு எந்த பொஸிஷனில் பாலூட்ட வேண்டும்; குழந்தைக்குப் போதுமான அளவு பால் தாயிடமிருந்து சுரக்கிறதா; வேலை பார்க்கும் அம்மாக்கள், தாய்ப்பாலை எப்படி பம்ப் செய்து பாதுகாப்பது எனப் பல்வேறு சந்தேகங்களுக்குத் தீர்வு சொல்கிறது, பிரெஸ்ட் ஃபீடிங் சப்போர்ட் ஃபார் இந்தியன் மதர்ஸ் (Breastfeeding Support for Indian Mothers) என்ற முகநூல் பக்கம். இந்த முகநூல் பக்கத்தில் தாய்மார்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு சொல்கிற முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் பிரியதர்ஷினி. தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். 

``பாலூட்டும் அம்மாக்களுக்கு உதவி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த முகநூல் பக்கம். ஆரம்பித்தவர் அதுனிக்கா பிரகாஷ் என்கிற லேக்டேஷன் கன்சல்டன்ட்.  என் குழந்தை பிறந்து மூன்று மாதம் இருக்கும்போது, இந்த குரூப்பில் சேர்ந்தேன். அப்போது, 5000 பேர்தான் இந்த குரூப்பில் இருந்தார்கள். தற்போது, 65,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில், லேக்டேஷன் கன்சல்டன்ட்ஸ், அப்பாக்கள், தாத்தா, பாட்டிகளும் அடக்கம்'' என்கிறார் சந்தோஷமாக. 

`` `கிரஹலஷ்மி' பத்திரிகையின் அட்டைப் படத்தில், குழந்தைக்குப் பாலூட்டுவதுபோன்ற மாடலுக்கு, உங்கள் ஃபேஸ்புக் குரூப்பில் நிறைய சப்போர்ட் செய்திருந்தீர்களே...'' என்றதும், பிரியதர்ஷினி பேச்சில் உற்சாகம் கூடியது. 

பிரியதர்ஷனி

``ஆமாம்! அந்த மாடல் மீது வழக்குப் போட்டு நிறைய மன உளைச்சல் கொடுத்திருந்தார்கள். அதனால்தான், எங்கள் குரூப்பில் சின்னக் குழந்தைகள் இருக்கும் அம்மாக்கள் எல்லாம், பொது இடத்தில் பாலூட்டுவதுபோல போட்டோ எடுத்து, ஃபேஸ்புக்கின் புரொபைல் பிக்சராக வைத்தார்கள். நானும் வைத்தேன். மை காட்! அதற்குக் கிடைத்த விமர்சனங்கள்...'' என்று பேச்சை நிறுத்துகிறார். 

``என்ன நடந்தது?'' 

``என் ஃபிரெண்ட் லிஸ்ட்டில் இருந்த ஒருவர், `உங்க புரொபைல் பிக்சரைப் பார்த்ததும், முதலில் என் ஆம்பளைப் புத்தி அசிங்கமாவே நினைச்சது. அப்புறம்தான், ஒரு குழந்தை சாப்பிடுவதை ஏன் தப்பாக நினைக்கிறோம் என்று உறுத்துச்சு. ஸாரி' என்றார். பலரும் `போல்ட், வாழ்த்துகள், ஹேட்ஸ் ஆஃப்' என்று சாட் செய்தார்கள். நன்றி என்று சொன்னேன். அவ்வளவுதான் உடனடியாக அவர்களின் பேச்சு, தவறான பாதையில் செல்ல ஆரம்பித்தது. நான் கொஞ்சம் தெம்பாக இருந்தால், இந்த மாதிரி ஆண்களைத் திட்டித் தீர்த்துவிடுவேன். பிள்ளையோடு விளையாடி ரொம்ப சோர்வாக இருந்ததால் பிளாக் பண்ணிவிட்டேன்'' என்று சிரிக்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் வரும் 'உலகத் தாய்ப்பால் வார'த்தின் போதுகூட, இந்த முகநூல் பக்க பெண்கள்,  இப்படி பாலூட்டுவதுபோன்ற தங்கள் படங்களை புரொபைல் பிக்சராக வைப்பார்களாம்.

பிரியதர்ஷினியின் கணவர், தன் உடம்பில் ஓர் அம்மா குழந்தைக்குப் பாலூட்டுவது போன்ற டாட்டூ போட்டுக்கொள்ளப் போகிறாராம். அந்தளவுக்குத் தன் மனைவியின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கிறார். 

`பிரெஸ்ட் ஃபீடிங் சப்போர்ட் ஃபார் இந்தியன் மதர்ஸ்' முகநூல் பக்கத்தின் சார்பில், பொது இடங்களில் பாலூட்டும்போது, என்னென்ன இடர்பாடுகள் ஏற்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். அதில் கலந்துகொண்டு, பொது இடங்களில் பாலூட்டிய அம்மாக்களில் 80 சதவிகிதம் பேர், தாங்கள் மோசமான அனுபவங்களைச் சந்தித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுபற்றி பேசிய பிரியதர்ஷினி, ``ஆண்களில் பலரும், செய்யக் கூடாத தவற்றை நாங்கள் செய்துவிட்டதுபோல முறைத்து முறைத்துப் பார்த்தார்கள். ஏன் பொதுவெளியில் பால்கொடுக்க வேண்டும்? ரெஸ்ட் ரூம் அல்லது டாய்லெட்டில் சென்று பால்கொடுங்கள் என்கிறார்கள். பெண்களிலேயே சிலர், `ஏன் பப்ளிக்கில் பால் கொடுக்க வேண்டும்' என்று கேட்டார்கள். நாப்கின் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டோம். பசிக்கும் பிள்ளைக்குப் பொதுவெளியில் பாலூட்டுவதில் என்ன தவறு? அது இயல்பான விஷயம்தான் என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோமோ'' என்கிறார் ஆதங்கமும் அக்கறையும் கலந்த குரலில்.


டிரெண்டிங் @ விகடன்