`அரசு அதிகாரிகளைக் காப்பாற்றும் உச்ச நீதிமன்றத்தின் தடை!’ - நாடு முழுவதும் வெடித்த பட்டியலின மக்களின் போராட்டம் #BharatBandh

ஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை பாதுகாப்பு (SC/ST protection act) சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்படும் அரசு அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடையை எதிர்த்து, இன்று வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

போராட்டம்

எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அரசு அதிகாரிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்களை உடனடியாகக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தடைவிதித்தது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்ட தொழிற்கல்வி இயக்குநர் சுபாஷ் காசிநாத் மஹாஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. ' இந்த விதிகளின்கீழ் அரசு அதிகாரிகளைக் கைது செய்யும் முன் டி.எஸ்.பி அந்தஸ்துக்குக் குறைவில்லாத காவல்துறை அதிகாரிகள், முறையாக வழக்குகளை விசாரிக்க வேண்டும். அரசு அதிகாரிகளைக் கைது செய்வதற்குமுன் ஆணையத்திடம் முறையான முன்அனுமதி பெற்றே கைது செய்ய வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

'இந்தத் தடைச் சட்டத்தை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக் கூடும்' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். உச்ச நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பட்டியலின மக்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளும் இந்தப் போராட்டத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் கலவரம் வெடித்துள்ளது, இதனால் அங்குள்ள போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது. நிலைமையைச் சரிசெய்ய போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்தனர். வாகனங்களுக்குத் தீவைப்பு, பேருந்து கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் மத்திய பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மனுத்தாக்கல் செய்திருந்தது, இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!