இனவாத பிரச்னையை எழுப்பிய நைஜீரிய நடிகருக்கு கேரள அமைச்சர் ஆதரவு! | Kerala Finance Minister supports Sudani from Nigeria actor over payment dispute

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (02/04/2018)

கடைசி தொடர்பு:17:00 (02/04/2018)

இனவாத பிரச்னையை எழுப்பிய நைஜீரிய நடிகருக்கு கேரள அமைச்சர் ஆதரவு!

கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் மலையாளப் படத்தில் தனக்குக் குறைவான ஊதியம் வழங்கப்பட்டதாக புகார் கூறிய நைஜீரிய நடிகருக்குக் கேரள அமைச்சர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இனவாத பிரச்னையை எழுப்பிய நைஜீரிய நடிகருக்கு கேரள அமைச்சர் ஆதரவு!

கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் மலையாளப் படத்தில் தனக்குக் குறைவான ஊதியம் வழங்கப்பட்டதாகப் புகார் கூறிய நைஜீரிய நடிகருக்குக் கேரள அமைச்சர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். 

சுடானி ஃப்ரம் நைஜீரியா படத்தில் ஒரு காட்சி

ஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த `சுடானி ஃப்ரம் நைஜீரியா’ என்ற படம் கடந்த பிப்ரவரி 23-ல் வெளியாகி கேரள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரளாவின் மலப்புரம் பகுதியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள கால்பந்து கிளப் அணியில் இணைந்து வெற்றிகரமான வீரராக உருவெடுப்பதை மையமாக வைத்து அந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் வரும் நைஜீரிய இளைஞர் கதாபாத்திரத்தில் சாமுவேல் ராபின்சன் என்ற நடிகர் நடித்திருந்தார். இந்தநிலையில், கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால், படத்தில் நடிக்க தனக்குக் குறைவான ஊதியம் அளிக்கப்பட்டதாக அவர் புகார் கூறியிருக்கிறார். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்று கூறி, தனக்குக் குறைவான ஊதியம் வழங்கப்பட்டதாகக் கூறிய அவர், பயணச் செலவுகள் உட்பட படத்துக்காக மொத்தம் ரூ.1,80,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார். 

இந்தநிலையில், நைஜீரிய நடிகருக்கு ஆதரவாகக் கேரள மாநில நிதித்துறை அமைச்சர் டி.எம்.தாமஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், `நண்பர் ஒருவரின் கட்டாயத்தின் பேரின் சுடானி ஃப்ரம் நைஜீரியா படத்தைப் பார்த்தேன். சிறப்பான காட்சியமைப்புகள் மூலம் மலப்புரம் பகுதிவாழ் மக்களின் வாழ்வு முறை இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நைஜீரிய இளைஞராக வருபவர் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய ஊதியப் பிரச்னையைத் தீர்க்க நிச்சயம் நான் உதவி செய்வேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர் தாமஸின் கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ள சாமுவேல் ராபின்சன், ``துரதிருஷ்டவசமாக சுடானி ஃப்ரம் நைஜீரியா படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து இதுவரை எனக்கு தொலைபேசி அழைப்பு வரவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கு நீதி கிடைக்க நீங்கள் உதவுவீர்கள் என நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.