புதிய கணக்காண்டில் சந்தையின் உற்சாகமான தொடக்கம்  | Share market for the day at close 02042018

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (02/04/2018)

கடைசி தொடர்பு:19:13 (02/04/2018)

புதிய கணக்காண்டில் சந்தையின் உற்சாகமான தொடக்கம் 

முக்கிய குறியீடுகளான சென்செக்ஸிலும் நிஃப்ட்டியிலும் ஒரு பெரிய வெயிட்டேஜ் கொண்ட ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்குகள் இன்று அவ்வங்கி வீடியோகான் குழுமத்துக்கு வழங்கிய கடன்

புதிய கணக்காண்டில் சந்தையின் உற்சாகமான தொடக்கம் 

2017-18 கணக்காண்டின் கடைசி வர்த்தக தினமான சென்ற புதன் கிழமையன்று மிகவும் தேக்க நிலையில் முடிவுற்ற இந்தியப் பங்குச்சந்தை, இன்று நடப்பாண்டின் முதல் வணிக தினத்தை நல்லதொரு பாசிட்டிவான முறையில் தொடங்கியது.

முக்கிய குறியீடுகளான சென்செக்ஸிலும் நிஃப்ட்டியிலும் ஒரு பெரிய வெயிட்டேஜ் கொண்ட ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்குகள் இன்று அவ்வங்கி வீடியோகான் குழுமத்துக்கு வழங்கிய கடன் தொடர்பான ஒரு விசாரணையில் வங்கியின் தலைவரான சந்தா கோச்சாரின்  கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்ட சிலர் விசாரிக்கப்படுவர் என்று வந்திருக்கும் செய்திகளினால் ஒரு சரிவைக் கண்டாலும், இன்று சந்தை ஒரு நல்ல முன்னேற்றத்தைக் கண்டது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 286.68 புள்ளிகள் அதாவது 0.87 சதவிகிதம் முன்னேறி 33,255.36 என முடிந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்ட்டி 98.10 புள்ளிகள், அதாவது 0.97 சதவிகிதம் உயர்ந்து 10,211.80-ல் முடிவுற்றது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதத்தில் வாகனங்கள் விற்பனையில் நல்ல ஏற்றம் கண்டதாக வந்த அறிவிப்புகள் இன்று சந்தையின் உற்சாக நிலைக்கு ஒரு காரணம்.

மருத்துவத் துறை பங்குகளைப் பொறுத்தவரை, சில பெரிய நிறுவனங்களின் தயாரிப்புக்கு அமெரிக்க ரெகுலேட்டர்களின் அனுமதி கிடைத்தது துறையைச் சேர்ந்த சில பங்குகளின் உயர்வுக்கு காரணமாக அமைந்தது.

அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு உயர்ந்தது இன்றைய உற்சாக நிலைக்கு ஒரு காரணமாக அமைந்தது. 

கடந்த சில வாரங்களில் காணப்பட்ட மந்தமான நிலையினால் சில சிறந்த பங்குகள் ஓரளவு மலிவான விலைகளில் வாங்கமுடிகிறது என முதலீட்டாளர்கள் எண்ணியது இன்று சந்தையின் முன்னேற்றத்துக்கான காரணங்களில் ஒன்று எனக்கூறலாம்.

தகவல் தொழில் நுட்பம், கேப்பிடல் கூட்ஸ், எப்.எம்.சி.ஜி மற்றும் பவர் துறை பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. ஆயில், மெட்டல், ரியல் எஸ்டேட் மற்றும் டெலிகாம் துறை சார்ந்த சில பங்குகள்கூட ஓரளவு லாபமீட்டின.

ஆசிய-பசிபிக் சந்தைகளில் இன்று ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் ஹாங்காங் சந்தைகள் ஈஸ்டர் விடுமுறைக்காக மூடப்பட்டிருந்தன. மீண்டும் சற்று தலை தூக்கியிருக்கும் வர்த்தக யுத்தம் பற்றிய கவலையினால் ஏனைய சந்தைகளில் குறிப்பிடத்தக்க பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை.

முக்கிய ஐரோப்பிய சந்தைகளும் இன்று இயங்காததாலும் முதலீட்டாளர்கள் உள்நாட்டு செய்திகளையே பெரிதும் ட்ராக் செய்யவேண்டியிருந்தது.

ஆட்டோமொபைல் துறையில் நன்கு முன்னேறிய பங்குகள் :

டி.வி.எஸ் மோட்டார்ஸ் 7.3%
டாடா மோட்டார்ஸ் 3.8%
ஹீரோ மோட்டோகார்ப் 2.7%
பஜாஜ் ஆட்டோ 2.3%
அசோக் லேலண்ட் 2%
மாருதி சுசூகி 1.7%

ஏற்றம் கண்ட மருத்துவத் துறை பங்குகள் 

அரபிந்தோ பார்மா 6.6%
சிப்லா 6%
லூபின் 5.9%
Dr ரெட்டி'ஸ் லேப் 2.4%

இதர சில லாபமீட்டிய பங்குகள் :

அதானி போர்ட்ஸ் 4.5%
கோடக் பேங்க் 4.3%
விப்ரோ 3%
எச்.டி.எப்.சி 2.1%
டி,சி,எஸ் 1.9%
லார்சென் & டூப்ரோ 1.7%
ஹிந்துஸ்தான் லீவர், ரிலையன்ஸ், இண்டஸ்இந்த் பேங்க், ஓ.என்.ஜி.சி மற்றும் ஐ.டி.சி நிறுவனப் பங்குகள் 1 முதல் 1.5 சதவிகிதம் வரை உயர்ந்தன.

விலை இறங்கிய பங்குகள்  :

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 5.8%
ஆக்ஸிஸ் பேங்க் 2.1%
எஸ்.பி.ஐ. 1.5%
இந்தியன் ஆயில் 3.4%
கோல் இந்தியா 1.3%
ஹின்டால்கோ 1.2%
பார்தி ஏர்டெல் 1.1%

மும்பை பங்குச்சந்தையில் 2104 பங்குகள் விலையேறின. 532 பங்குகள் விலையிறங்கியும், 175 பங்குகள் சென்ற வணிக தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமல் முடிந்தன.


டிரெண்டிங் @ விகடன்