உலகக்கோப்பை வென்ற நாளில் பத்மபூஷண் விருது பெற்ற தோனி!

உலகக்கோப்பை வென்ற நாளில் பத்மபூஷண் விருது பெற்ற தோனி!

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் இரண்டாம் கட்ட விழாவில் இன்று, ராணுவ உடையில் வந்து கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பத்மபூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.

தோனி

Photo Credit: ANI

குடியரசு தினத்தை முன்னிட்டு கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள், கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் கிரிக்கெட் வீரர் தோனி பத்மபூஷண் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருந்தார். தோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் அரசுக்குப் பரிந்துரைசெய்திருந்தது. தோனி, இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். அவருடைய தலைமையில் இந்திய அணி 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்றது. டெஸ்ட் அரங்கிலும் சிறந்த இடத்தைப் பிடித்தது. இதனால் இவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. 

Photo Credit: ANI

பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பத்மவிபூஷண் விருதைப் பெற்றார்.  அதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட விழாவில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, ராணுவ உடையில் வந்து குடியரசுத் தலைவரிடம் பத்மபூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி உள்ளிட்டோர், பத்ம விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். 

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (ஏப்ரல் 2, 2011) மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!