வெளியிடப்பட்ட நேரம்: 07:12 (03/04/2018)

கடைசி தொடர்பு:09:00 (03/04/2018)

பட்டியலின மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்- மத்திய அரசு உறுதி!

பட்டியலின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, முழு அளவில் உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கடந்த மாதம் 20-ம் தேதி வெளியானது. 

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்செய்துள்ள மறுஆய்வு மனுவில், கடந்த 1989-ம் ஆண்டுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள கடுமையான விதிகளை நீர்த்துப்போகச்செய்யும் வகையில் இந்தத் தீர்ப்பு இருப்பதாக, பல்வேறு தரப்பிலிருந்து கருத்துகள் எழுந்துள்ளதால், தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் அல்லது மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  சமீபத்தில் வெளியான எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்குறித்த தீர்ப்பை மறுஆய்வுசெய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அந்தச் சட்டத்தின்கீழ் புகார் தெரிவித்தால், தன்னிச்சையாக கைது நடவடிக்கை கூடாது என்றும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் முன், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சட்டத்தின்கீழ் வரும் சில பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்வதுடன், இந்தச் சட்டத்தின் கீழ் எஸ்.சி/ எஸ்.டி-யினருக்கு எதிரான சில குறிப்பிட்ட குற்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிலானவை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, அதில் உள்ள உண்மைகளையும், சட்டம் தொடர்பான கொள்கைகளையும் நீதிமன்றம் உணரத் தவறிவிட்டதாகவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், இந்த விவகாரம்குறித்து 5 நீதிபதிகளைக்கொண்ட அமர்வு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் மனுவில் கோரப்பட்டிருப்பதுடன், அனைத்திந்திய எஸ்.சி/.எஸ்.டி அமைப்பும் கேட்டுக்கொண்டுள்ளது. என்றாலும், வழக்கமான நடைமுறைகளின்படி அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மேலும், எஸ்.சி./ எஸ்.டி பிரிவினரின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி, மத்திய அரசு பட்டியலின மக்களுக்கு எதிரானது என்று குற்றம்சாட்டுவதாகவும் மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க