துணிக்கடை உரிமையாளரை வியப்பில் ஆழ்த்திய திருடன்! | Woman receives license via courier after her handbag gets stolen

வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (03/04/2018)

கடைசி தொடர்பு:15:09 (03/04/2018)

துணிக்கடை உரிமையாளரை வியப்பில் ஆழ்த்திய திருடன்!

ஒரு பெண்ணின் கைப்பையைத் திருடிய திருடன் சில நாள்களுக்குப் பிறகு, உரிமையாளரின் லைசென்ஸை மட்டும் கூரியரில் அனுப்பிய சுவாரஸ்யமான சம்பவம் புனேவில் நிகழ்ந்துள்ளது.

லைசென்ஸ்

சப்னா டே என்ற 47 வயதான பெண் புனே, கேம் ஏரியாவில் ஒரு ரெடிமேடு துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் தன் கடைக்கு காரில் செல்வதும் அங்கிருந்து மாலையில் சிறிது தூரம் வாக்கிங் செல்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதே போன்று கடந்த மாதம் தன் காரை நிறுத்திவிட்டு வாக்கிங் சென்றுவிட்டு வந்த சப்னாவுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. தனது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த கைப்பை திருடப்பட்டிருந்தது. காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்த உடனேயே கைப்பை திருடப்பட்டுள்ளது என்பதை சப்னா உணர்ந்துகொண்டார். கைப்பையில் ரூ.1,500, வீட்டின் சாவி, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் சில பொருள்கள் இருந்துள்ளன. இந்தத் திருட்டு குறித்து வானாவாடி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அவரது கைப்பையில் இருந்த முக்கியமான ஆவணமாக இருந்தது லைசென்ஸ் மட்டுமே. லைச்சென்ஸ் இல்லாததால் புதிய லைசென்ஸ் வரும் வரை கார் ஓட்டமுடியாமல் கவலையில் இருந்துள்ளார் சப்னா.

இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னர் சப்னா பெயருக்கு யாரோ தெரியாதவரிடமிருந்து கூரியர் ஒன்று வந்துள்ளது. கூரியரை திறந்து பார்த்த சப்னாவுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் பொருள் ஒன்று உள்ளே இருந்துள்ளது, காணாமல் போனதாகத் தான் கருதிய தனது லைசென்ஸ் மட்டும் கூரியர் வந்ததைக் கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டார். தனது கைப்பையைத் திருடிச்சென்ற திருடன் அதில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு லைசென்ஸை மட்டும் திருப்பி அனுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் சப்னாவை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்த நிகழ்வையும் திருடனின் நேர்மை குறித்தும் தன் உறவினர்கள் அனைவரிடமும் பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.