பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து - அறிவிப்பைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு..! | PM calls for withdrawal of fake news circular

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (03/04/2018)

கடைசி தொடர்பு:14:35 (03/04/2018)

பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து - அறிவிப்பைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு..!

பொய்யான செய்தி கொடுக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு.

மோடி

'பத்திரிகையாளர்கள் சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருவதாகவும், அவ்வாறு தொடர்ந்து தவறான செய்திகளைப் பரப்பினால், பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் தடைசெய்யப்படும் என்று நேற்று மத்திய அரசு அறிவித்திருந்தது. முன்னதாக இதுபற்றிக் கூறிய மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, விரைவில் விதிகளை வகுக்க உள்ளதாகவும் இதற்காக எதிர்வரும் காலத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சிக்கு என ஒரு தனி ஆணையம் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் பெரிய பேசுபொருளாக உருவெடுத்தது, பின்பு பிரதமர் மோடியின் வழிக்காட்டுதலின் படி, பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, இந்த விவகாரத்தை பிரஸ் கவுன்சில் மட்டுமே பேச வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மோடியின் அறிவிப்புக்குப் பிறகு டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஸ்மிருதி இரானி, நேற்றைய அறிவிப்பு பி.ஐ.பி, பிரஸ் கவுன்சில் மற்றும் ஒளிபரப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது, இதற்குப் பல பத்திரிகையாளர்களும் பத்திரிகை நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்துகளை கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் போலிச் செய்திகளுக்கு எதிராகப் போராட முடியும், மேலும், ஆர்வம் கொண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எனப் பதிவிட்டுள்ளார்.