எஸ்.சி/எஸ்.டி தடுப்புச் சட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து | Supreme Court refuses to stay its order on SC/ST Act

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (03/04/2018)

கடைசி தொடர்பு:18:40 (03/04/2018)

எஸ்.சி/எஸ்.டி தடுப்புச் சட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான தீர்ப்புக்கு இடைக்காலத்தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்

பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கடந்த மாதம் 20-ம் தேதி வெளியானது. இந்தத் தீர்ப்பினால் நேற்று வட மாநிலங்கள் முற்றிலும் கலவர பூமியாக மாறிபோயின. பட்டியலின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, முழு அளவில் உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்செய்துள்ள மறுஆய்வு மனுவில், கடந்த 1989-ம் ஆண்டுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள கடுமையான விதிகளை நீர்த்துப்போகச்செய்யும் வகையில் இந்தத் தீர்ப்பு இருப்பதாக, பல்வேறு தரப்பிலிருந்து கருத்துகள் எழுந்துள்ளதால், தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் அல்லது மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வெளியான எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்குறித்த தீர்ப்பை மறுஆய்வுசெய்ய வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், இந்த விவகாரம்குறித்து 5 நீதிபதிகளைக்கொண்ட அமர்வு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தங்கள் தீர்ப்பைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களே போராடுகிறார்கள், வன்கொடுமைச் சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கக் கூடாது, எஸ்.சி / எஸ்.டி தடுப்புச் சட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை, வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்துக்கு எதிரான தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதிக்க முடியாது என்று கூறினர். மேலும், மத்திய அரசின் மறு சீராய்வு மனு மீதான விசாரணை 10 நாள்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.